விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத தலைவர் அ. பாலகிருஷ்ணன் ஜி (வயது 88) கடந்த 27.08.2026 அன்று அதிகாலை 12.05 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாளே, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் இரங்கல்
விவேகானந்த கேந்திரத்தின் தலைவரான மாண்புமிகு
அ. பாலகிருஷ்ணன் ஜி அவர்கள், கர்மயோகத்தின் அடையாளமாக திகழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர் போதித்த, உலக சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை என்ற செய்தியைப் பரப்புவதற்கும், தேசம் மற்றும் சமுதாய சேவைக்காகவும், தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.
அவரது எளிமையான வாழ்க்கை, தன்னலமற்ற சேவை, தியாகம் மற்றும் ஹிந்துத்துவத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை பாரதியர்களுக்கு என்றென்றும் உத்வேகமாகத் திகழும். சுவாமி விவேகானந்தரின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திரத்தின் ஆரம்ப காலத் தொண்டர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரது மறைவால், ஹிந்து சமூகம் ஒரு மகத்தான ஆன்மாவை இழந்துள்ளது. அவர் விண்ணுலகை அடைந்ததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிர்ப்புவது மிகவும் கடினமானதாகும். மறைந்த பாலகிருஷ்ணன் ஜி அவர்களுக்கு எங்களது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறோம். அந்த உயர்ந்த ஆன்மாவிற்கு பரமாத்மா உயரிய நற்கதியையும், மோட்சத்தையும் அருள வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.(ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாளே இணைந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு)
இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி
விவேகானந்த கேந்திராவின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றிய
ஏ.பாலகிருஷ்ணன் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பாலகிருஷ்ணன் அவர்கள் தனது வாழ்நாளின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளுக்காகவும், சமூக சேவைக்காகவும் தன்னை அர்ப்பணித்தார். விவேகானந்த கேந்திராவின் ஆரம்பகால ஜீவன் விரதிகளில் ஒருவராக, அவர் நாடு முழுவதும் அயராது பணியாற்றினார். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுடன் அவருக்கு ஆழமானத் தொடர்பு இருந்தது. கல்வி, சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் முக்கியப் பங்காற்றினார். விவேகானந்த கேந்திரா குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
விஜயபாரதம் வார இதழ் பத்திரிகை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.