பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

குள்ளக் குள்ளனே, குண்டு வயிறனே
வெள்ளிக் கொம்பனே, விநாயகனைத் தொழுவோம்!

குழந்தையாக இருக்கும்போது நம்மில் பலரும் பாடி மகிழ்ந்த பாடல் இது. நமது குடும்பங்களில் பிள்ளையார் வழிபாடு, நம் மனதோடு பின்னிப் பிணைந்தது.
கொழுக்கட்டையும், எள்ளுருண்டையும், அவல் பொரியும் அவருக்கு மட்டுமல்ல, மழலைப் பருவத்தில் நம் அனைவருக்குமே பிடித்தமானவை. எனவேதான், பிள்ளையாரை கடவுளாக மட்டும் கருதாமல் நம்மில் ஒரு தோழராக பாவித்துக் கொண்டு வழிபடுகிறோம்.
கொஞ்சம் மஞ்சள்பொடி அல்லது பசுஞ்சாணத்தில் நீரைக் குழைத்துப் பிடித்து வைத்தால் பிள்ளையார் தயாராகி விடுவார் அருள் பாலிக்க. எதுவும் கிடைக்கவில்லையா? களிமண் போதும். சிறிது வெல்லமும், அருகம்புல்லும் படைத்தால் போதும், இந்த யானைமுகக் கடவுளுக்கு. இது தான் விநாயகரின் பெருமை.
கணபதி வழிபாடு பாரதத்தில் பன்னெடுங்காலம் தொட்டே இருந்து வருகிறது. இதனை ‘கணாபத்தியம்’ என்ற வழிபாட்டு முறையாக முறைப்படுத்தியவர், பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர். அவர் இயற்றிய ‘கணேச பஞ்சரத்தினம்’ வழிபாட்டுப் பாடல்களில் முதன்மையானது. சங்கரருக்கு முன்னரே கணபதி வழிபாடு இருந்தமைக்கு, பழமையான கோயில்களில் காணப்படும் சிற்பங்களும் தனிச் சன்னிதிகளும் கட்டியம் கூறுகின்றன.

புராணங்களில் கணேசர்

மிகப்பழமையான ரிக் வேதத்தில் ‘கணபதி’ என்று விநாயகனைப் போற்றும் சுலோகம் இருக்கிறது. பன்னிரு புராணங்களிலும் கணநாயகர் பற்றிய கதைகள் உள்ளன. தமிழ்க் கடவுளான முருகனுக்கு எழுந்த கந்த புராணத்தில், குன்றக் குமரனின் காதல் கைகூட அவரது தமையனான கணேசன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
தமிழின் முதல் இலக்கண நூலான ‘பேரகத்தியம்’ நூலை எழுதிய குறுமுனி அகத்தியருடன் சிறுகுழந்தையாக கணேசன் நிகழ்த்திய தீராத விளையாட்டு, காவிரி நதியின் மூலத்துக்கு காரணமானது.
சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் முப்புரம் எரிக்கக் கிளம்பியபோது, அவரது தேரச்சு முறித்து விளையாட்டுக் காட்டியவர் கணபதி. சிவன் கோயில்களில் என்றும் ‘விக்னேஸ்வரனுக்கே’ முதல் மரியாதை அன்று முதல் இன்று வரை வழங்கப்படுகிறது.
மீனவ குலத்தில் தோன்றிய வியாச மகரிஷி சொல்ல, தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி கணநாதர் எழுதியது தான், பல லட்சம் கவிதைகளைக் கொண்ட மகாபாரதம். இது பாரதம் முழுவதும் நிலவிவரும் நம்பிக்கை. எந்த ஒரு அரிய செயலானாலும், கணபதியை வணங்கிய பிறகே தொடங்குவது என்ற மரபுக்கு இதுவும் காரணம்.
தமிழின் மிகப்பழமையான இலக்கியமான சங்க இலக்கியங்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை. அதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார். விநாயகருக்கு எருக்கம்பூ சாற்றுவது பற்றிய குறிப்பு கபிலரின் புறநானூற்றுப் பாடலில் வருகிறது. ’மதுரைக்காஞ்சி’ நூலில் விநாயகருக்குப் பிடித்தமான ‘மோதகம்’ படைத்தது பற்றிய பாடல் உண்டு.
தமிழ் மூதாட்டி எழுதிய ‘விநாயகர் அகவல்’ காரியத் தடைகளைப் போக்க வல்ல மந்திரப் பாடலாகக் கருதப்படுகிறது. “சீதக் களபச் செந்தாமைரைப்பூம் பாதச் சிலம்பும் பல இசை பாட” என்று தொடங்கி, “வித்தக விநாயக விரைகழல் சரணே” என்று முடியும் 64 வரி ஆசிரியப்பாவில் அமைந்த இப்பாடல், நமது குடும்பங்களில் தினசரிப் பிரார்த்தனையாக ஒலிப்பது. இதில் மிகச் சிறந்த தத்துவமும் அடங்கியுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் சில அறிவிலிகள், தொல் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை என்று குதர்க்கம் பேசுவதுண்டு. அவர்களைப் பற்றிய கவலையின்றி, தமிழகத்தில் விநாயக சதுர்த்தியை ஒட்டி, லட்சக் கணக்கில் பிள்ளையார்களை பிரதிஷ்டை செய்து ஊர்வலம் வந்து மகிழ்கின்றனர் தமிழ் மக்கள்.

வரலாற்றில் கணேசர்

செங்கல்பட்டு மாவட்டம், இரும்பேடு கிராமத்தில் கிடைத்துள்ள விநாயகரின் சிற்பம் பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டு எனப்படுகிறது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இங்குள்ள மூர்த்தி, குடைவரைச் சிற்பமாகும். இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
அதன் பிறகு பல்லவர் கால சிற்பங்களிலும், குடைவரைக் கோயில்களிலும் விநாயகர் சிற்பங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பொ.யு. 8 ஆம் நூறாண்டுக்குப் பிந்தைய சோழர்கள் காலத்தில் அழகிய செப்புத் திருமேனிகள் பல வடிவங்களில் வடிக்கப்பட்டன. விடுதலைப் போராட்டக் காலத்தில், மக்களை ஆன்மீக ரீதியாக ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பால கங்காதர திலகர். அவர்தான், வீட்டு வழிபாடாக இருந்த கணபதி உற்சவத்தை நாட்டு உற்சவமாக்கியவர்.
1893ஆம் ஆண்டு முதல், ‘சர்வஜனிக் கணேஷோத்சவம்’ என்ற பெயரில் களிமண் பிள்ளையார்களை தெருக்களில் பிரதிஷ்டை செய்து, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார் திலகர். இன்று விநாயக சதுர்த்தி மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட திலகர் தான் ஆதர்ஷமாகத் திகழ்கிறார்.
அந்நாளில் இறைபக்தியும் கூட, நாட்டு விடுதலைக்கு உரமூட்டும் கருவியாகவே திகழ்ந்தது. ”விடுதலை கூடி மகிழ்ந்திடவே கணபதிராயன் காலைப் பிடித்திடுவோம்” என்று தமிழகத்தின் மகாகவி பாரதி பாடியது அதனால்தான்.

நம் காலத்தின் நாயகன்

இன்று நாடு நெடுகிலும் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாட்டையே ஒருங்கிணைப்பவையாக மாறி இருக்கின்றன. பசுஞ்சாணப் பிள்ளையார் முதல் 60 அடி உயரத்திலான பிரம்மாண்ட விநாயகர் வரை, சதுர்த்தியை ஒட்டிய நாட்கள் முழுவதும் எங்கெங்கு காணினும் பிள்ளையார் திருக்கோலங்கள் தான். தசரா போல சதுர்த்தி கொண்டாட்டங்களும் பல நாட்கள் நடைபெறுகின்றன.
ஜாதி, மதம், மொழி, இனம், வர்க்கம் போன்ற வேற்றுமைகளைத் தகர்த்து, அனைவரின் ஆதர்ஷ நாயகனாக வலம் வரும் விநாயகரை வழிபாடுகள் முடிந்து கரைக்க எடுத்துச் செல்லும் போது விம்மி அழுவோர் அநேகம். அந்த அளவுக்கு அவர் நமது நெஞ்சங்களில் நிறைந்துள்ளார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் விநாயகரை முன்னிறுத்திய திலகரின் அடியொற்றி, தமிழகத்தில் ‘இந்து முன்னணி’ நிறுவனர் அமரர் இராம.கோபாலன் அவர்கள் உருவாக்கிய பக்தி இயக்கம், விநாயகரை முன்னிறுத்தியே அமைந்தது. தெருக்கள் தோறும் வண்ணமான, பலவித அவதார வடிவங்களில் விநாயகர்களை பிரதிஷ்டை செய்து, அவற்றை ஒவ்வொரு நாளும் வழிபட்டு, அதையொட்டி கோலப் போட்டிகள், ஆன்மீகப் போட்டிகள், திருவிளக்கு வழிபாடு போன்றவற்றை நடத்தி சமுதாயத்தை ஒருங்கிணைத்தது இந்து முன்னணி. 1980ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கணேச யக்ஞம், சத்தமின்றி சமுதாய விழாவாக மாறி இருக்கிறது.
இன்று, இந்து முன்னணி அமைப்பு மட்டுமல்லாது, சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் ஆங்காங்கே விநாயகர்களை வைத்து விழாக்களை நடத்துவதைக் காண்கிறோம். இளைஞர்களும் குழந்தைகளும் அவரவர் விரும்பிய அளவில் விநாயகர் சிலைகளைத் தூக்கிக் கொண்டு பவனி வருவதைக் கண்டு மகிழ்கிறோம்.
இதே தமிழகத்தில் தான் 60 ஆண்டுகளுக்கு முன்னர், கடவுள் நம்பிக்கையும், பண்பாடும் அற்ற பதர்கள் விநாயகர் சிலைகளை நடுத்தெருவில் உடைத்து எக்காளமிட்டனர். அதைக் கண்டு வருந்திய பக்தர்களின் வேதனையைத் தீர்க்கவே, இன்று பல லட்சம் விநாயகர்கள் தமிழகத்தில் பவனி வருகிறார்களோ?
ஏழையோ, பணக்காரனோ, குடிசையில் வசிப்பவரோ, செல்வந்தரோ எவராயினும் அனைவரும் நம்பி வழிபடும் கடவுள் கணேச மூர்த்தி. வினைகளைக் களையும் விக்னேஸ்வரனான அவரது அருள் இருந்தால், நினைத்தவை எல்லாம் நிறைவேறும் என்பதற்கு இராம.கோபாலன் அவர்களின் வாழ்வே சான்று.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை, திருவல்லிக்கேணியில் சிறு துளிராகத் தொடங்கிய விநாயக சதுர்த்தி மக்கள் விழா, இன்று ஹிந்து சமுதாய மக்களை ஒருங்கிணைப்பதுடன், நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. விநாயகர் சிலைகளை உடைத்த கயவர்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிக் கிடப்பது கணபதி பெருமானின் அருள் அல்லவா?

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை!
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்!!
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலைகள் தீருமே!

கட்டுரையாளர்:  வ.மு.முரளி