ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும், சிவசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தன் -− ஆனந்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார், சிவசுப்பிரமணிய ஆதித்தன் ஜி. நான்காம் வகுப்பு வரை காயாமொழியில் படித்தபின், 5 –− 7ம் வகுப்பு வரை திருச்செந்தூரிலும், 8ம் வகுப்பை சென்னையிலும், 9-−11ம் வகுப்பு வரை நாசரேத்திலும்,
பி.யூ.சி படிப்பை ஆதித்தனார் கல்லூரியிலும் படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
தந்தை சிவந்தி ஆதித்தன் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றபின், இலங்கையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அவரிடம் 80 பேருக்கு மேல் வேலை செய்தனர். சிங்கள மொழியில் 20 திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனரும் ஆவார்.
1978 ஆம் ஆண்டு, படிக்கும்போது திராவிடர் கழக சிந்தனையில் தீவிரமாக இருந்தார். அப்போது தாய் மாமாவின் வற்புறுத்தலால் ஐயப்பனுக்கு மாலை அணிந்தார். ஹிந்துக்கள் விரதமிருந்து வணங்கி வழிபடும் ஐயப்பனை ஆபாசமாக விமர்சித்து தி.க.வினர் பலகை வைத்தனர். அதனை எதிர்த்துப் போராடினார். இதனைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்.ஸால் மட்டுமே முடியும் என்ற நண்பரின் ஆலோசனையின் பேரில், தனது பள்ளி தோழனான சுந்தர லட்சுமணன் ஜியின் உதவியை நாடினார்.
சுந்தர லட்சுமணன் ஜியின் தந்தை வாத்தியார் சுந்தரம் ஜியுடன் சேர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் மூலம் ஆதித்தன் ஜிக்கு சங்க அறிமுகம் கிடைத்தது. அப்போதைய கன்னியாகுமரி கோட்ட பிரச்சாரகாக இருந்த பாஸ்கர் ராவ் ஜி, ஜில்லா பிரச்சாரக் சுடலையாண்டி ஜியுடன் நெருங்கிப் பழகி சங்க ஷாகாவிற்கு வரத் தொடங்கினார்.
1982ல் ஏற்பட்ட மண்டைக்காடு கலவரமும், அதனைத் தொடர்ந்த வன்முறை சம்பவங்களும், ஹிந்துக்கள் மீதான கிறிஸ்துவத் தாக்குதல்களும், ஆதித்தன் ஜிக்கு மிகுந்த கவலை அளித்தது. பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்ள பஸ், லாரி மூலம் திருச்செந்தூரில் இருந்து 160 பேரை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு, போலீசாரிடம் அடி வாங்கி மிகவும் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உண்ணாவிரதம் இருந்தார். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்தச் சிறை வளாகத்தில் சங்கத்தின் பிரச்சாரக்கான இராம கோபாலன் ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் தந்தை பொன்னையா ஐயப்பன் ஜி என பலரும் இருந்தனர். 16 நாட்கள் சிறைவாசம் என்பது சங்கப் பயிற்சி முகாம் போலவே இருந்தது. தினமும் அதிகாலை ஏகாத்மதா ஸ்தோத்திரத்துடன் ஆரம்பித்து, உடலுக்கு, மனதுக்கு என அனைத்திற்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இராம கோபாலன் ஜி கராத்தே (நியுத்த) பாடம் எடுத்தார்.
1983ல், திருப்பராய்த்துறையில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், 1984ல் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், 1985ல் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாம் முடித்த சிவசுப்பிரமணிய ஆதித்தன் ஜி, 1981 முதல் 1983 வரை இரண்டு வருடங்கள் விஸ்தாரக்காகவும், பின்னர் ஒரு வருடம் பிரச்சாரக்காகவும் சங்கப் பணியாற்றினார்.
1986 −- 1991 வரை, ஐந்து ஆண்டுகளாக விஜயபாரதத்தில் சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது ஏதேனும் ஒரு நாள், சந்தா சேகரிக்கவில்லை எனில், அன்று உணவருந்த மாட்டார். 1986ல், காயாமொழியில் உள்ள மண்டல சித்தி விநாயகர் கோயிலில் மக்களை ஒன்றுதிரட்டி கரசேவையில் ஈடுபடுத்தினார்.
1991ல், சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான
சூரி ஜியின் அறிவுறுத்தலின் பேரில், இந்து முன்னணி மாநில பொருளாளரானார். மேலபள்ளிப்பத்து, திருச்சியில் பாரத பண்பாட்டுக் கல்லூரி நிறுவ தேவையான பணம் வசூலிக்கும் வரை சட்டை, செருப்பு அணிய மாட்டேன் என சபதமிருந்து, 5 வருடங்கள் வரை அவ்வாறு இருந்தார். பின்னர் இராம கோபாலன் ஜியின் வற்புறுத்தலில், சபதம் நிறைவேறிய பிறகு, சட்டை உடுத்திக் கொண்டார்.
1986ல், `மாவட்ட திருப்பாவை, திருவெம்பாவை கமிட்டி’ என்ற அமைப்பை நிறுவி, மாணவ – மாணவியர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போன்ற போட்டிகளை நடத்தி, இளம் பிள்ளைகள் மத்தியில் ஹிந்து உணர்வை ஊட்டினார். வருடத்திற்கு 100க்கு மேலான ஹிந்து பெண் குழந்தைகளை படிக்க வைத்து, நல்வழி காட்டினார். காசி, மதுராவை மீட்கும் வரையில் வெளிநாடு செல்ல மாட்டேன் என சபதம் எடுத்து, அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.
2011ம் ஆண்டில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், இந்து முன்னணி பொறுப்பில் இருந்து விலகிய பின்னர், ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து வருகிறார்.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் திலகவதி அம்மாளை திருமணம் செய்த ஆதித்தன் ஜிக்கு, ஆனந்த நிவேதிதா மற்றும் ஆனந்த மீராதேவி என்ற இரண்டு மகள்களும், சிவராம ஹெட்கேவார் ஆதித்தன் மற்றும் சிவராமகோபால கிருஷ்ண கோகலே ஆதித்தன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் பெண்கள் அமைப்பான சேவிகா சமிதியில் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாம் முடித்து, சிக்ஷக்காக இருந்துள்ளனர். மூத்த மகன் இரண்டாம் ஆண்டு சங்க பயிற்சி முகாம் முடித்து, ஏ.பி.வி.பி அமைப்பின் பொறுப்பில் உள்ளார்.
மாற்று சிந்தனையில் இருந்து, பின்னர் சங்கத்திற்கு அறிமுகமாகி, சங்கப் பொறுப்பேற்று பிரச்சாரக்காகவும் இருந்து, சிறைக்கு சென்று உடல்நலன் பாதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து சங்கப்பணி செய்து வரும் சிவசுப்பிரமணிய ஆதித்தன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
கட்டுரையாளர் : அ. ஓம்பிரகாஷ்