கோபுரத்தில் ஏறிய தொண்டர்கள்: பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பு

தெலுங்கானா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி, தன்னை காண சிறிய கோபுரங்கள் மீது ஏறி அமர்ந்திருந்த தொண்டர்களை கீழே இறங்கும்படி வேண்டுகோள் விடுத்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, நிர்மல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பங்கேற்றார். பிரதமரை காண, பா.ஜ., தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பொதுக்கூட்டம் நடந்த மைதானம் முழுதும் மனித தலைகளாக காட்சி அளித்தன.

பிரதமரை காணும் ஆவலில், பா.ஜ., தொண்டர்கள் பலர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கோபுரங்கள் மீது ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்திருந்தனர். பேச்சின் இடையே, தொண்டர்கள் இவ்வாறு அமர்ந்திருப்பதை பிரதமர் பார்த்தார். உடனடியாக பேச்சை நிறுத்திய அவர், கோபுரங்கள் மீது அமர்ந்திருக்கும் தொண்டர்களை கீழே இறங்கும்படி ஹிந்தியில் கூறினார். இதை பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெலுங்கில் மொழிபெயர்த்தார். அப்போது பிரதமர் கூறியதாவது: உங்கள் அன்பில் மகிழ்கிறேன். இந்த கூட்டத்தில் உங்களால் என்னை சரியாக பார்க்க முடியவில்லை என தெரிகிறது. அதற்கு மன்னிப்பு கோருகிறேன். உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தால் கடுமையான காயம் ஏற்படும். அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கோபுரங்களின் மேல் ஏறி அமர்ந்திருப்பவர்கள் தயவு செய்து கீழே இறங்கிவிடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டர்கள் கீழே இறங்கிய பின், பிரதமர் பேச்சை தொடர்ந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தெலுங்கானாவின் ஹைதராபாதில் கடந்த 11ல் நடந்த பிரசார பொதுக்கூட்டத்திலும், மின் விளக்கு கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த இளம் பெண்ணை, பிரதமர் மோடி கீழே இறங்கும்படி வேண்டுகோள் விடுத்த காட்சி அப்போது வெளியானது.