குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோவையில் நேற்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில்நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும், கோவை தொடர்குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கோவை பாரதி பார்க் சாலையில், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் அருகில் தொடங்கிய பேரணி, மேட்டுப்பாளையம் சாலைவழியாக ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து, 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 22-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், செயலர் கே.டி.ராகவன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செயலர் கிஷோர்குமார், விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பி.எம்.நாகராஜன், பொருளாளர் லஷ்மண நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய மத்திய முன்னாள்அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘1998 கோவை தொடர்குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு மாநில அரசு சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும்.
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்குடன், சிறுபான்மை மக்களை போராட்டம் நடத்த தூண்டி விடுகிறார்கள். தமிழகத்தில் பயங்கரவாதம், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’’ என்றார். இதேபோல, கோவை குண்டுவெடிப்பைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி சார்பில் மலர் அஞ்சலி, கண்டன உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவையில் நேற்று நடைபெற்றன. குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்காக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல் ஆணையர் சுமித் சரண் தலைமையில் மாநகரம் முழுவதும் 300 அதிவிரைவுப் படை வீரர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.