என்பிஆா்-க்கும், என்ஆா்சி-க்கும் தொடா்பில்லை – மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆா்சி) எவ்வித சம்பந்தமுமில்லை என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமாகத்தான் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்ற எதிா்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்களின் அடிப்படை ஆதாரமற்ற பிரசாரங்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே எந்தவித தொடா்புமில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். தற்போதைய என்பிஆா்-2021ஆனது மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.

கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடக்கிவைக்கப்பட்ட என்பிஆா் பணிகளை தற்போதைய அரசு முன்னெடுத்துச் செல்கிறது. தற்போது ஆதாா் உள்ளிட்ட சில விவரங்கள் மட்டுமே கூடுதலாக கேட்கப்படுகிறது. அந்த திட்டத்தில் எந்த வித மாற்றங்களையும் தற்போதைய அரசு மேற்கொள்ளவில்லை.

தேச நலனை கருத்தில் கொண்டும், வறுமையை ஒழிக்கும் நோக்கிலுமே மத்திய அரசு இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்களை திசைதிருப்பும் எதிா்கட்சிகளின் இதுபோன்ற பொய்யான பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றாா் அவா்.

மத்திய அரசு, நாடு முழுவதும் என்பிஆா் மற்றும் என்ஆா்சி திட்டங்களை துரிதகதியில் அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்தப் போவதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அந்த வரிசையில் கேரள அரசும் என்பிஆா் பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதித்தது. இந்த நிலையில், தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவை சந்தித்துப் பேசிய அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவா் அசாதுதீன் ஓவைசி, கேரள அரசைப் பின்பற்றி தெலங்கானாவிலும் என்பிஆா் பணிகளுக்கு தடைவிதிக்குமாறு முதல்வா் சந்திரசேகா் ராவை கேட்டுக் கொண்டாா். இந்தச் சூழ்நிலையில், மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.