ஆர்.வி.எம் இயந்திரம் ஏற்படுத்திய ஜுரம்

உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (ஆர்.வி.எம்) தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜனவரி 16ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து பல கட்சிகளுக்கும் உதறல் ஏற்படத் துவங்கியுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகிவிடுமோ, வருங்காலத்தில் இந்த நடைமுறை வெளிநாடுகளிலும் செயல்படுத்தப்பட்டால் என்ன ஆகுமோ, எங்கே எங்கே தங்கள் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ என்ற பயம் அவர்களது செயல்பாடுகளில் நன்றாகவே தெரிகிறது. இது ஜனவரி 16க்குப் பிறகு இதற்கு எதிர்ப்புகள் இன்னும் வெளிப்படையாகவே எழும் என்பது திண்ணம். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆர்.வி.எம் வாக்குப்பதிவு முறை தேவையற்றது. அந்தமுறையை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி கூத்தாகிவிடும். வி.சி.க சார்பில் மிக கடுமையாக இதனை எதிர்க்கிறோம். இந்த கருத்தையே அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பதிவு செய்வோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து ஜனநாயக அமைப்புகளும் இந்த முறையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.