ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷா

ஒரு முறை இந்திய ராணுவத்தின் 26வது இன்ஃபேண்ட்ரி டிவிஷன் தலைமையகத்துக்கு புதிதாகப் பயிற்சி முடித்த ஒரு லெஃப்டினண்ட் வந்தார். அங்கே காலை உடற்பயிறசியை முடித்துக் கொண்டு சிவிலியன் உடையில் நடந்து வந்து கொண்டிருந்தார் டிவிஷனின் கமாண்டிங் ஆபீசரான மேஜர் ஜெனரல். அவரை அடையாளம் தெரியாத அந்த லெஃப்டினண்ட் “மிஸ்டர்! என் பெட்டியைத் தூக்கி வர வேண்டும். அதற்கு யாரைப் பார்க்க வேண்டும்?” என்றார். சிரித்த மேஜர் ஜெனரல் “உங்கள் பெட்டியை நீங்களே எடுத்து வரலாம்” என்றார். “ஸார்! நான் ஒரு கமிஷண்ட் ஆபீஸர். ஏன் இங்கே இந்த வேலை செய்ய யாரும் இல்லையா?” என்றார்.

மேஜர் ஜெனரல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தார். பின்னாலேயே மிடுக்குடன் நடந்து போனார் அந்த லெஃப்டினண்ட். படையினர் ஆச்சரியமான பார்வை பார்த்தனர். ஒரு வீரர் ஓடி வந்து “ஸாப்ஜி! என்னிடம் கொடுங்கள் பெட்டியை” என்றார். “மஹிந்தர்! உன் வேலையைப் பார். போ!” என்றார் மேஜர் ஜெனரல். இவர் ஏதோ ஒரு ஆபீஸர் போல என்று எண்ணிய அந்த லெஃப்டினண்ட் “ஸார்! நீங்கள் இங்கே என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

லெஃப்டினண்டின் வீட்டின் முன் பெட்டியை வைத்த மேஜர் ஜெனரல் “நான் இங்கே புதிதாக வரும் ஆபீஸர்களுக்கு உதவி செய்கிறேன். மீதமிருக்கும் நேரத்தில் இந்த இன்ஃபேண்ட்ரி டிவிஷனை கமாண்ட் செய்கிறேன்.” என்றார். வியர்த்து நடுங்கிவிட்டார் லெஃப்டினண்ட். “ஸார்! நான்… அது வந்து… வேணும்னு செய்யலை ஸார். நீங்க யாருன்னு தெரியல ஸார். ஐயாம் ஸாரி ஸார். மன்னிச்சிடுங்க ஸார்.” என்று உளறலுடன் மன்னிப்பு கேட்டார்.

அவரைத் தோளில் தட்டிக் கொடுத்து, அதற்குள் தான் கொண்டு வரச்சொன்ன தேநீரை அவருக்கும் கொடுத்துவிட்டு “நீ ஆபீசராக இருக்கலாம். ஆனால் உன்னால் முடிந்தவரை உன் வேலைகளை நீயே செய்ய வேண்டும். யுத்த காலத்தில் நான் ஆபீசர், அவன் சோல்ஜர் என்ற பேச்சு சரியாக இருக்காது. நீயும் நானும் அவனும் நாட்டுக்காக வேலை செய்யாத்தான் வந்திருக்கிறோம். தேவையான இடங்களில் மட்டும் அதிகாரத்தைக் காட்டு.” என்றார்.

பிறகு அந்த லெஃப்டினண்டிடம் கை குலுக்கி “ஐயாம் ஸாம். மேஜர் ஜெனரல் ஸாம் மானெக்‌ஷா. என்ன உதவி என்றாலும், பிரச்சனை என்றாலும், எப்போதும் என்னிடம் நீ வரலாம்.” என்றார். பின்னாளில் ராணுவத் தலைமைத் தளபதியாக உயர்ந்து தேசத்தின் ராணுவப் படைகளுக்கு ஃபீல்ட் மார்ஷலாக உயர்ந்த மானெக்‌ஷாவின் பிறந்தநாள் இன்று.