காஷ்மீரி பண்டிட்டுகள் வீடு திரும்புவார்கள்

சஞ்சீவனி சாரதா கேந்திரா சைத்ரா (வசந்த) நவராத்திரியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் மூன்று நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நவ்ரேவின் கடைசி நாளில் காஷ்மீரி ஹிந்து சமூகத்தினரிடம் காணொலி மூலம் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நாள் மிக அருகில் உள்ளது என்ற உணர்வு எனக்குள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், காஷ்மீர் பண்டிட்டுகள் 1990களில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதன் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. சிலர் இந்தப் படத்தை ஆதரிக்கிறார்கள், சிலர் இதில் பாதி உண்மை உள்ளது என்கிறார்கள்… ஆனால் ‘இந்த அப்பட்டமான உண்மையை உலகின் முன் வைத்ததன் மூலம், இந்த படம் காஷ்மீர் பண்டிட்டுகளின் வலியை மட்டும் முன்வைக்கவில்லை; நம் அனைவரையும் அது உலுக்கியது’ என்பது இந்த தேசத்தில் உள்ள சாமானியர்களின் கருத்து. இன்று காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றத்தின் உண்மை பின்னணியை ஒவ்வொரு பாரத குடிமனும் அறிந்திருக்கிறார்கள். காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது. அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வேரோடு பிடுங்கப்பட மாட்டார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் தாய் மண்ணிற்கு திரும்புவதற்கான உறுதியை எடுக்க வேண்டும். நிலைமை விரைவில் மாறும். காஷ்மீரி பண்டிட்களை வெளியேற யாரும் கட்டாயப்படுத்த முடியாது; யாராவது அவ்வாறு செய்ய முயன்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.