உலகின் ஒரே ஜி.டி.நாயுடு

ஒரு மனிதர், ஒரு துறையில் வித்தகராக இருக்கலாம். ஆனால், ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் என்று பல துறைகளில் வித்தகராக இருந்தவர். உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை பாரத விஞ்ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில், கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடுவுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அந்தக் காலகட்டத்தில் இருந்த இவரை போன்ற சில விஞ்ஞானிகள் போட்ட விதைதான், இப்போதிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல.

ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என அழைப்பதுண்டு. ஆனால், அவர் உலகின் ஒரே ஒரு ஜி.டி.நாயுடு. பிரச்னைகளைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண்பது ஜி.டி.நாயுடுவுக்கு மிகவும் பிடிக்கும் விஷயம். உலக அளவில் மிக முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், இதற்கான அங்கீகாரம் ஜி.டி.நாயுடுவுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி, தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார் ஜி.டி.நாயுடு.

ஏழைகளுக்கு வீடு, எலக்ட்ரிக் மோட்டார், கீ வால் கிளாக், கட்டட கலவை, ஷேவிங் ரேசர்,  உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, ரேடியோகிராம், ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின், தமிழ் டயல் ரேடியோ என பல்வேறு கண்டுபிடிப்புகள் இவரது புகழை வளர்த்தன. இவரது பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது. கண்டுபிடிப்பாளராக மட்டும் இல்லாமல் யுனைடெட் மோட்டார் சர்வீஸ், பருத்தி ஆலை என பல தொழில்களையும் துவங்கினார்.

தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.

ஜி.டி நாயுடுவின் பிறந்த தினம் இன்று