மின்சார கட்டண உயர்வு ஏன்?

தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பைச் சேர்ந்த காந்தி என்பவர் அறன்செய் யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘மின்சார வாரியம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். 2011ல் ரூ. 43 ஆயிரம் கோடி கடன் இருந்ததாக மின் துறை அமைச்சர் கூறுகிறார். அந்த அளவுக்கு கடன் வருவதற்கு என்ன காரணம், யார் காரணம், எப்படி வந்தது? கடன் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போயுள்ளது. அப்போது எல்லாம் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கடன் இருக்கும் காரணத்தால் விலை உயர்த்துவதாக கூறுகின்றனர். தற்போது மின் வாரியத்திற்கு ரூ. 1,59,700 கோடி கடன் இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இது சரியானதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

மத்திய அரசு சொன்னதால் விலை ஏற்றுகிறோம் என இவர்கள் சொல்வது பொருத்தமானதாக இல்லை. மின்சார வாரியம் பெரும் கடனில் இருக்கிறது. அதன் காரணமாக தான் மத்திய அரசின் அழுத்தத்திற்கு இவர்கள் இசைய வேண்டியிருக்கிறது. மின்சார வாரியத்திற்கு எப்படி இவ்வளவு கடன் சேர்ந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாநில அரசு தந்த வெள்ளை அறிக்கையில் ரூ.1,34,000 கோடி கடன் என கூறியுள்ளனர். இந்த ஆண்டு கடன் ரூ.13,000 கோடி வந்திருந்தாலும் மொத்தம் ரூ.1,47,000 கோடி தான் வந்திருக்கும். இந்த புள்ளிவிவரங்கள் ஒத்துப்போகவில்லை. இந்த கடன் எப்படி வந்தது என சொல்ல வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு உள்ளது.

10 சதவீத நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக அமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார். அது வரும் நிதியாண்டிற்கான கணக்கில்தான் வரும். கடந்த நிதியாண்டுக்கு அது பொருந்தாது. மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தில் இவர்கள் மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படாமல், ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் உயர்த்துவோம் என உத்தரவாதம் கொடுத்திருக்கின்றனர். அதனை மத்திய அரசு வலியுறுத்துகிறது. மின்வாரியத்திற்கு கடனே இல்லை எனில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் உள்ள, 120 மெகாவாட் திறன் கொண்ட ‘லான்கோ தஞ்சாவூர் எரிகாற்று மின்சார நிலையத்துடனான ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. அவர்கள் ஓராண்டுக்கு மேலாக ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய் 9 பைசாவுக்கு தருகிறோம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என கேட்கின்றனர். ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் போடவில்லை. போட்டிருந்தால், 84 கோடி யூனிட் மின்சாரம் ஒரு யூனிட் 3 ரூபாய்க்கு கிடைத்திருக்கும். ஏன் வேண்டாம் என்றார்கள்? ஆர்.டி.ஐ.,யில் கிடைத்த தகவலின்படி ஏப்ரல், மே 2 மாதத்தில் மட்டும் அவர்கள் 16 ரூபாய்க்கு சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கியுள்ளனர். 3 ரூபாய் எங்கே உள்ளது 16 ரூபாய் எங்கே உள்ளது? இது தொடர்பாக புகார் மனு அனுப்பியுள்ளோம்.

தனியார் நிறுவனத்துடன் நஷ்டத்திற்கு போடப்படும் ஒப்பந்தங்கள் தான் இழப்பிற்கு அடிப்படை காரணம். அதானி நிறுவனம் வழங்கும் சூரிய ஒளி மின்சாரம் யூனிட்டுக்கு 7 ரூபாய் 1 பைசா என 25 ஆண்டுகளுக்கு கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால், இன்று சூரிய ஒளி மின்சாரத்தின் விலை 3 ரூபாய் 10 பைசா என்ற விலையில் உள்ளது. இந்த விலையில் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். அப்படி தான் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்கள் வாங்கியுள்ளன.  சூரிய ஒளி மின்சார விலை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டு வருவது தெரிந்தே இவர்கள் ரகசியமாக 7 ரூபாய் 1 பைசாவுக்கு போட்டுள்ளனர். அதுவும் 25 ஆண்டுகளுக்கு ஏன் போட்டார்கள்? இந்த கேள்விக்கெல்லாம் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும். இதை எல்லாம் சரிசெய்யமல் மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் மட்டும் வாரியத்தின் இழப்பை சமாளிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.