ஹிந்து சமய அறநிலையத் துறை எதற்கு?

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருட்டு மற்றும் சுவாமி சிலைகள் சேதம் தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை.

கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது.

கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் ஹிந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோயில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு தி.மு.க அரசே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.