மேற்கு வங்க பயங்கரம்

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள பார்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேக் இருந்தார். இவர் திருணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இரு நாட்களுக்கு முன், இரவில் இருசக்கர வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள் பாது ஷேக் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பாது ஷேக் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திருணாமூல் கட்சியை சேர்ந்த குண்டர்கள், அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களை அவர்கள் அங்கே செல்லவிடாமல் தடுத்தனர். இந்த வன்முறையில் 8 முதல் 10 பேர் வரை உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் பின்னணியில் திருணமூல் காங்கிரஸ் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கையை மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்கு வங்க அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர், “இந்த மரணங்கள் கொடூரமானவை மேற்கு வங்கம் ஒரு மிருகத்தனமான கலாச்சாரத்தின் பிடியில் இருக்கிறது” என குற்றம் சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மாநில அரசு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க கோரியுள்ளது. தீ வைப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு விசாரிக்க பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா, உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளார்.