பயந்து ஓட மாட்டோம்

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு வருமான வரித் துறையினர் சென்றபோது, அவர்களை தி.மு.க குண்டர்கள் மறித்து வாக்குவாதம் செய்து தாக்கினர். அவர்கள் வந்த காரையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமார், கல்லா சீனிவாசராவ், பங்கஜ்குமார் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதலில் காயத்ரி உட்பட 2 பேருக்கு கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய சென்னை வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் சிவசங்கரன், “கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகளை அங்கிருந்தவர்கள் தாக்கியதில், அதிகாரிகளுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஆய்வாளர் காயத்ரி உட்பட 2 பேருக்கு கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை அவர்கள் வேண்டுமென்றே நடத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மேலும் பல்வேறு புகார்களை அளிக்க உள்ளோம். இதில் யாரெல்லாம் தாக்கினார்களோ, ஆதாரங்களை அழித்தார்களோ, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் வலியுறுத்துவோம். அவர்களை வருமான வரித் துறை அதிகாரி தாக்கியதற்கான ஆதாரம் இருந்தால் அவர்கள் அதனை சமர்ப்பிகட்டும். அன்று நிகழ்ந்தவை அனைத்தையும் மக்கள் அறிவார்கள். நாங்கள் புகார் கொடுத்தோம் என்பதற்காக, அவர்களும் திருப்பி புகார் கொடுத்திருப்பதால் நாங்கள் பயந்து ஓடிவிடுவோம் என யாரும் நினைக்க வேண்டாம். வருமான வரித் துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து அதிகாரிகள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறினார். வருமான வரித் துறை அதிகாரிகள் அளித்த புகார்களின் பேரில், 100க்கும் மேற்பட்டோர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 3, தாந்தோணிமலையில் 1 என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, இந்த வழக்குகளில்  தி.மு.க கரூர் மாநகராட்சி வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மேயரின் உறவினருமான பூபேஷ், மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள் லாரன்ஸ், அருண், ஷாஜகான், சிவபிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், பூபதி, தமிழ்ச்செல்வன், ரஜினி சிவா உட்பட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.