சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்கும் பிரதமர் மோடி

 

உத்திரகண்ட் செல்லும் பிரதமர் மோடி, கடந்த 1901ம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார். பிரதமர் மோடி அக்டோபர் 11 – 12ம் தேதி, இரண்டு நாள் பயணமாக உத்திரகண்ட் மாநிலத்துக்கு செல்கிறார். 11ம் தேதி பித்தோராகர் மாவட்டத்தில், சீன எல்லைக்கு அருகிலுள்ள நாராயண் ஆசிரமம் சென்று, அன்று இரவு அங்கு தங்க உள்ளார். மறுநாள் கைலாச மலையை தரிசனம் செய்வதற்காக, ஜோலிங்காங் பகுதிக்குச் செல்ல உள்ளார். பின், பித்தோராகர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

பித்தோராகருக்குப் பிறகு, சம்பாவத் மாவட்டத்தில் உள்ள, அத்வைதா ஆசிரமத்துக்குச் சென்று, 12ம் தேதி இரவு அங்கேயே தங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்ட கலெக்டர் நவ்நீத் பாண்டே மற்றும் அதிகாரிகள், இரண்டு முறை ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். பிரதமர் மோடி தங்க உள்ள அத்வைதா ஆசிரமம், ராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளை ஆகும். சுவாமி விவேகானந்தரின் விருப்பப்படி மார்ச் 19, 1899-ல் இது நிறுவப்பட்டது. 1901ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 18 ம் தேதி வரை, சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கி உள்ளார். இந்த ஆசிரமம் 6,400 அடி உயரத்தில் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாயாவதி ஆசிரமம் என்றும் இது அழைக்கப்படுகிறது.