தொற்று நோயை விரட்ட விவேகானந்தர் காட்டிய வழி

மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே தொற்றுகளும் பெருந்தொற்றுகளும் அவ்வப்போது தலைதூக்கியுள்ளன. பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அன்று முதல் இன்றுவரை எத்தனையோ பெருந்தொற்றுகள் கடும் சேதத்தை விளைவித்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் கடும் பிளேக் வெகு வேகமாகப் பரவியது. பல லட்சம் பேர் உயிரிழந்தனர். மக்கள் கொத்துகொத்தாக மடிந்தார்கள். இந்த பிளேக் நோயை ‘கருப்பு மரண வியாதி’ என்றே அழைத்தார்கள். மனித குல வரலாற்றில் மிக அதிக உயிர்களைக் பலி கொண்ட பெருந்தொற்றுகளில் இதுவும் ஒன்று.

கடந்த ஓராண்டு காலமாக இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் கடந்த சில மாதங்களாக சீனாவிலுள்ள வூகான் நகரில் 2019ல் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இரட்டை உருமாறிய கொரோனா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஆனால் இதைக் கண்டு நாம் மனம் தளரக்கூடாது. நம் நாட்டில் தடுப்பூசி போடும் பணி வெகு வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நாட்கள் கடுமையானவைதான். ஆனால் அதற்காக கலக்கம் அடையவேண்டியதில்லை. மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் நம்மை நாமே வலுப்படுத்திக்கொள்ளவேண்டும். சுவாமி விவேகானந்தர் 1898ல் வங்காளத்தை பிளேக் நோய் தாக்கியபோது பிளேக் அறிக்கையை எழுதி வெளியிட்டார். அது இப்போதும் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. கல்கத்தா பேலூரிலுள்ள நிலம்பர் முகர்ஜியின் பண்ணை வீட்டில் 1898ம் ஆண்டு மார்ச் மாதம் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அவருக்கு அப்போது கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. உடல் தேறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அதுமட்டுமல்லாமல் உடல் நலிவு உக்கிரமடைந்துகொண்டே வந்தது. அவரது சீடர்கள், கல்கத்தாவை விட்டுவிட்டு டார்ஜிலிங்கிற்கு செல்லலாம் என்று யோசனை கூறினார்கள். ஏனெனில் முன்பு ஒருமுறை டார்ஜிலிங்கிற்கு சென்றபோது, அவரது உடல் ஆரோக்கியம் நன்கு மேம்பட்டது.

இதையடுத்து 1898ம் மார்ச் மாதம் 30ம் தேதி சுவாமி விவேகானந்தர் டார்ஜ்லிங் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்தார். மலையேற்றம் சார்ந்த சிரமத்தாலும் கடும் மழைப்பொழிவு முன்கூட்டியே தொடங்கிவிட்டதாலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சளி இருமலும் தொல்லைப்படுத்தின. ஏப்ரல் மாத இறுதியில் கல்கத்தாவுக்கு திரும்பிவிட வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சலும் இன்ஃப்லியன்ஸாவும் ஏற்பட்டதால் டார்ஜிங்கிலிருந்து புறப்பட முடியவில்லை. இந்நிலையில், கல்கத்தாவில் பிளேக் வெகு வேகமாக பரவுகிறது என்று சுவாமி விவேகானந்தரிடம் சீடர் சுவாமி பிரம்மானந்தா தெரிவித்தார்.

மேலும், சுவாமி விவேகானந்தரிடம் “உங்கள் உடல் மிகவும் பலவீனமாக உள்ளது எனவே நீங்கள் கல்கத்தாவுக்கு உடனே செல்லாதீர்கள். இன்னும் சிறிது காலம் இங்கேயே தங்கியிருங்கள்” என்று சுவாமி பிரம்மானந்தா கூறினார். ஆனால், சுவாமி விவேகானந்தர் உடனடியாக கல்கத்தாவுக்கு புறப்பட்டுவிட்டார். அவர் இடையில் எங்கும் இளைப்பாறவில்லை. பிளேக் நோயை கட்டுப்படுத்தவும் பீதியைத் தணிக்கவும் சுவாமி விவேகானந்தர் நேரடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். கல்கத்தா மக்களுக்காக அவர் எழுதியதுதான் ‘பிளேக் மேனிபஸ்டோ’ எனப்படும் ‘பிளேக் அறிக்கை’.

இந்த அறிக்கை முதலில் ஆங்கிலத்தில் வரைவு செய்யப்பட்டது. பிறகு ஹிந்தியிலும் வங்காளியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. “அச்சத்தை நெருங்க விடாதீர்கள். உலகி லேயே மிகப்பெரிய பாவம் அச்சம்தான். அச்சத்திலிருந்து விடுதலை பெற்றால்தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். உங்களுடைய உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆக்கப் பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். சாவது ஒருமுறைதான். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அச்சம் கொண்டவர்கள் கனந்தோறும் மடித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தேவையற்ற அச்சத்தை விரட்டியடிங்கள். இறைவனின் பூரண நம்பிக்கையை வையுங்கள். இறைவனின் அருள் நம்மை காப்பாற்றும். வேஷ்டியை வரிந்து கரித்துக்கொண்டு நிவாரணப் பணியில் ஈடுபடுங்கள். வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நோயைவிட வியாதி பற்றிய அச்சம் மிகவும் மோசமானது. இறை அருளில் பரிபூரண நம்பிக்கை இருந்தால் பகலவனைக் கண்ட பனி போல அச்சம் அகன்றுவிடும்’’ என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டி ருந்தார். அதுமட்டுமல்லாமல் எவற்றை செய்யவேண்டும், எவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் அவர் தெளிவு படுத்தியிருந்தார்.

“வீட்டின் உட்பகுதியை மட்டுமல்லாமல் வெளிப்பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அறைகளில் அசுத்தத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். படுக்கை, ஆடைகள், போன்றவற்றையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வடிகாலைக் கூட செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள். கெட்டுப்போன உணவை ஒதுக்கிவிடுங்கள். தூய்மையான உடனுக்குடன் சமைக்கப்பட்ட சத்தான உணவை சாப்பிடுங்கள். பலவீனமான உடம்பு எளிதில் நோய்வாய்பட்டுவிடும். எனவே உடலை திடப்படுத்துங்கள். விதிக்கு இடம் கொடுக்காதீர்கள். வதந்திகளை நம்பாதீர்கள்’’ என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் எழுதிய பிளேக் அறிக்கை துண்டுப் பிரசுரம் கல்கத்தாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் விநோயிகிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க நிவாரணப் பணிகளை, சுவாமி விவேகானந்தர் போர்க்கால அவசரத்துடன் மேற்கொண்டார். பணத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவரிடம் சீடர்கள் கேள்வி எழுப்பினர். சுவாமி விவேகானந்தர் சற்றும் தயங்காமல் ‘நாம் புதிதாக வாங்கியுள்ள மடத்துக்கான நிலத்தை தேவைப்பட்டால் விற்றுவிடலாம். நாம் சன்னியாசிகள். பிச்சையெடுத்து நம்மால் வாழமுடியும். முன்பு போல மரத்தடியில் படுத்து உறங்க முடியும்’ என்று கூறினார். ஆனால் மடத்துக்கென வாங்கிய நிலத்தை விற்கவேண்டிய நிலை ஏற்படவில்லை. நிவாரணப் பணிக்கு போதுமான நிதியுதவி கிடைத்துவிட்டது. இந்த நிலம் அரசின் ஒருங்கிணைப்புடன் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டது. இங்கு பிளேக் நோயாளிகளுக்கான தனிமை மையங்கள் அமைக்கப்பட்டன. சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

போர்க்கால அவசரத்துடன் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது. வேதாந்ததைப் போதிப்பது மட்டும் துறவியின் பணியல்ல. நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அதை போக்கவும் நிவாரணங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் துறவியின் பணிதான் என்பதை சுவாமி விவேகானந்தரும் அவரது சீடர்களும் செய்து காட்டினர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கல்கத்தாவில் இரண்டாவது முறையாக பிளேக் பரவியது. சகோதரி நிவேதிதாவை செயலாளராகக் கொண்டு நிவாரணக் குழுவை சுவாமி விவேகா னந்தர் அமைத்தார். இதில் சுவாமி சதானந்தா கண்காணிப்பாளராக இடம் பெற்றார். சுவாமி சிவானந்தா, சுவாமி நித்யானந்தா, சுவாமி ஆத்மானந்தா ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். அவர்கள் கல்கத்தா மக்களுக்கு பகலிரவு பார்க்காமல் தொடர்ந்து பணியாற்றினார்கள். ‘‘சகோதர சகோதரிகளே, உங்களுக்கு உதவி தேவையெனில், பேலூர் ஸ்ரீ பகவான் ராமகிருஷ்ண மடத்தை அணுகுங்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வழித்தடத்தில் சேவை செய்யும் துறவிகள் உங்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டுவார்கள். எந்த அளவுக்கு உதவி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உதவி செய்வார்கள் என்பதை உள்ளத்தில் பதியவைத்துக் கொள்ளுங்கள்’’ என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார்.

துர்கா தேவியின் அருளால் போதுமான அளவு நிதியுதவி கிடைத்தது. 1899ம் ஆண்டு மார்ச் மாதம் நிவாரணப் பணி துவங்கியது. ஷாம்பஜார், பாக்பஜார், சுற்றியுள்ள பகுதிகளில் சேரிகளைத் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், செய்தி பத்திரிகைகள் வாயிலாக நிதியுதவி கோரி வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தரும் சகோதரி நிவேதிதாவும் பிளேக் கண்டு அஞ்சவேண்டாம் என உரை நிகழ்த்தினர். ஏப்ரல் 21ம் தேதி, கிளாசிக் தியேட்டரில் மாணவர்களிடையே சகோதரி நிவேதிதை பேசியபோது ‘‘உங்களில் எத்தனை பேர் தன்னார்வலர்களாக வரத் தயாராக இருக்கிறீர்கள். சேரிகளில் உள்ள குடிசைகளை துப்புரவு செய்ய வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம். சகோதரர்களை இக்கட்டான தருணத்தில் கைவிடுபவர்கள் தங்களுக்குத் தாங்களே துன்பம் விளைவித்துக்கொள்கிறார்கள்.

ஏழை எளிய மக்களின் துயரத்தைப் போக்குவதே அறங்களில் தலையாயது. எனவே இந்த நற்பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வாருங்கள்’’ என்று குறிப்பிட்டார். அவரது உரையைக் கேட்டதாலும் சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலால் ஈர்க்கப்பட்டதாலும் சுமார் பதினைந்து மாணவர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். போதுமான அளவில் தன்னார்வலர்கள் இல்லாத தருணத்தில் சகோதரி நிவேதிதையே சந்துகளையும் குடிசைகளையும் தூய்மைப் படுத்தும் பணியில் நேரடியாக ஈடுபட்டார். வெள்ளைக்கார பெண்மணி இவ்வாறு செய்வதைப் பார்த்த, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மன ரீதியாக குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். உடனே அவரும் துடைப்பத்தைத் தூக்கிகொண்டு சகோதரி நிவேதிதைக்கு உதவிகரமாக செயல்பட்டார். அந்தப் பகுதியிலேயே சகோதரி நிவேதிதை சில நாட்கள் தங்கினார். கல்கத்தாவிலேயே அந்த பகுதியில்தான் பிளேக் நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. குடிசைகளின் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவதுடன் சகோதரி நிவேதிதை நின்றுவிடவில்லை. அங்குள்ள, தாயை இழந்த குழந்தைகளையும் அவர் அன்னையைப் போல அன்புடன் பராமரித்தார். மிகவும் அபாயகரமானது என்பதை உணர்ந்திருந்தபோதிலும் சகோதரி நிவேதிதை, அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

அவர் தனது ஆங்கிலேய நண்பர் திருமதி கௌல்ஸ்டனுக்கு இதுகுறித்து எழுதினார். அதில் ‘‘முடிவில்லாத பணி தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த குழுவினர் பிளேக் நோயை கட்டுப்படுத்த பகலிரவு பார்க்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே விழிப்புணர்வு கொண்ட ஒவ்வொரு குடிமகனும் பரப்பப்படும் வதந்திகளை உதறித் தள்ளவேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க உதவி செய்யவேண்டும். நோயாளிகளை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துவரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இன்றைய சூழலுக்கு இது முற்றிலும் பொருத்தமாக உள்ளது. நாமும் வதந்திகளை உதறித்தள்ளுவோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இயன்ற உதவிகளை காலம் தாழ்த்தாமல் செய்வோம்.
நன்றி : ஆர்கனைசர் (ஆங்கில வார இதழ்) தமிழில் : அடவி வணங்கி