பாரத ராணுவத்தினரின் எல்லையில்லா சேவை தன்வந்திரி அவதாரத்தில் விஷ்ணு!

இது போர்க்காலம் அல்ல. அதனால் பாசறைகளில் ராணுவத்தினர் ஓய்வாக இருப்பார்கள் என்றுதானே நினைக்கிறோம்? போர்க்காலத்தை விட இருமடங்கு பொறுப்புடன் பாரத ராணுவத்தினர் எல்லையில் தேசத்தை பாதுகாத்துக்கொண்டே தேசத்திற்குள் மக்களைக் காக்கும் கொரோனா நிவாரணப் பணிகளில் அபாரமாக தோள் கொடுக்கும் விஷயம் அனைவரும் தெரிந்து கொண்டு நமது ராணுவத்தினருக்கு நன்றியோடு சல்யூட் அடிக்க வேண்டிய நேரம் இது.

டெல்லியில் மே 17 அன்று பாரத ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் 2Dஜி என்ற கொரோனா மருந்துப் பொடியை அறிமுகப்படுத்திப் பேசுகையில் “ஆக்சிஜன், படுக்கை வசதி என அனைத்து வசதிகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது; அதில் ராணுவம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் எல்லையை பாதுகாப்பதிலும் ராணுவம் தீவிரமாக உள்ளது” என்று கூறினார். சார், சல்யூட்.

கவனியுங்கள், ௨டிஜி என்ற இந்த மருந்துப் பொடி தயார் செய்தது வேறு யார்? ராணுவத்தின் அமைப்பான பாதுகாப்பு ஆய்வு மேம்பாடு அமைப்பு (DRDO) தான். கொரோனாவுக்கு மருந்து கிடையாது என்று இருந்த சூழ்நிலையில் இந்த மருந்துப் பொடியை 2 டோஸ் எடுத்துக் கொண்டால் 42 சதவீதம் பேருக்கு கொரோனாவிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்பது ஆரம்ப கட்ட தகவல். பலே டிஆர்டிஓ! சல்யூட்.

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தேசம் தடுமாறிய நிலையில் பாரத அரசின் உத்தரவுப்படி பல நாடுகளிலிருந்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களை பாரதத்திற்குக் கொண்டு வரும் பணியில் இந்திய விமானப் படையும் இந்திய கப்பற்படையும் முழு மூச்சாக இறங்கின. மே மாத தொடக்கத்தில் இந்திய கடற்படையின் 5 போர்க் கப்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஆக்சிஜன் கொள்கலன்களை பாரதத்தின் துறைமுகங்களில் கொண்டு வந்து சேர்த்தன.
இன்னும் தொலைதூர நாடுகளில் இருந்து பாரத விமானப்படையின் விமானங்கள் கொள்கலன்களை கொண்டுவந்து முக்கிய உள்புற நகரங்களில் அடுக்கின. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பழுதுபட்டிருந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை புயல் வேகத்தில் பழுது நீக்கி உற்பத்தி தொடங்க உறுதுணை புரிந்தவர்கள் வேறு யார்? ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் தான்.

கொண்டுவந்த கொள்கலன்களில் உற்பத்தியான ஆக்சிஜனை சேகரித்தாயிற்று. தேவையான ஊர்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டுபோய்ச் சேர்க்க விசேஷ ரயில்களை இயக்கி மத்திய அரசு தேசத்தை வியப்பில் ஆழ்த்தியதே, அந்த சிறப்பு ரயில்கள் அத்தனையும் ராணுவ தளவாட ரயில்கள்! தரைப்படை என்ன செய்தது என்று தானே கேட்கிறீர்கள்? பல்லாயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிக் கருவிகளை நூற்றுக் கணக்கான பாரத நகரங்களுக்கு மின்னல் வேகத்தில் கொண்டுபோய் சேர்த்தவர்கள் ராணுவ லாரிகளை இயக்கிய பாரத ஜவான்கள். இத்தனையும் பீதியை கிளப்பிய இரண்டாவது அலைக்கு இடையே! பலே பாரத முப்படை! சல்யூட்.

பல மாநிலங்களில் கொரோனா நோயாளி களை தனிப்படுத்தும் மையங்களை அமைக்க (ஆயிரக்கணக்கான படுக்கைகளுடன்) பாரத ராணுவத்தினர் தங்கள் தளவாடங் களையும் வளாகங்களையும் தந்து உதவியது தான் டாப். பல ஊர்களில் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது ராணுவ மருத்துவ பணியாளர்கள் அணி அணியாக வந்து சிகிச்சை மையங்களுக்கு உயிர் கொடுத்தார்கள் பலே ஜவான்கள்! சல்யூட்.