பிசுபிசுத்துப்போன போராட்டம்

தேர்தல் காலம் வந்தாலே, அரசை மிரட்டி பணியவைத்து சலுகைகள் பெறுவது அல்லது அந்த அரசிற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி அடுத்தமுறை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வது என்ற குறிக்கோளோடு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அரசியல், மதவாத அமைப்புகளும் இதன் பின்னால் இருந்து இயக்குவது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான். தற்போது நடைபெற்று வரும் வங்கி ஊழியர்கள் போராட்டம், ஜேக்டோ ஜியோ போராட்டம், செவிலியர் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், பேருந்து ஊழியர்கள் போராட்டம் எல்லாம் அந்த ரகம்தானோ என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றியுள்ளதில் வியப்பேதும் இல்லை. ‘போராட்டம் செய்ய வேண்டாம், தி.மு.க அரசு அமைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என சமீபத்தில் ஸ்டாலின் கூறியது இந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது. இந்நிலையில், 14வது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள், நேற்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்தன. ஆனால், போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கைகளால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பணிமனைகளில் பல பேருந்துகள் இயக்கப்பட்டன. மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமமின்றி சென்றனர். இதனால், ஸ்டிரைக் பிசுபிசுத்துப்போனது. பொதுமக்கள் ஆதரவில்லாத, அவர்கள் வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற போராட்டங்களால் மக்கள் மனதில் எதிர்கட்சிகள் மீது வெறுப்பு வளருமேயன்றி நல்லெண்ணம் ஒருபோதும் வராது என்பதற்கு கடந்த கால வரலாறே சாட்சி. சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்வார்களா?