மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது விஜயபாரதம் மின்னிதழ்

விஜயபாரதம் மின்னிதழ் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.

விஜயபாரதம் மின்னிதழ் தன் இரண்டாம் ஆண்டு பயணத்தை முடித்து, இன்று வெற்றிகரமாக தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, வாரம்தோறும் உங்கள் இல்லம் தேடி வந்து கொண்டிருந்த நமது விஜயபாரதம் வார இதழை சில வாரங்களுக்கு வெளியிட முடியாத சூழல் நிலவியது. அப்போது உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டி ஒரு தற்காலிக ஏற்பாடாகவே விஜயபாரதம் தினசரி மின்னிதழாக துவக்கப்பட்டது.

உங்களின் அபரிமிதமான அன்பும், ஒத்துழைப்பும் காரணமாக எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வாசகர்களிடம் விஜயபாரதம் மின்னிதழ் சென்று சேர்ந்தது. வாசகர்கள் அனைவரிடமும் இந்த புதிய முயற்சிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இதனால் இயல்பு நிலை திரும்பி பத்திரிகை அலுவலகங்கள் தொடர்ந்து வழக்கம்போல் செயல்பட துவங்கியபோதும் மின்னிதழை நிறுத்தாமல் தொடர்ந்து செய்திகளை வழங்கிட முடிவு செய்தோம்.

அதன் காரணமாக இன்றுவரை உங்கள் ஒத்துழைப்பால் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களை வாட்ஸப், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வெற்றிகரமாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. உண்மையில், இது விஜயபாரதம் மின்னிதழின் வெற்றியல்ல, இது முழுக்க முழுக்க வாசகர்களாகிய உங்களது ஈடுபாட்டால், பங்களிப்பால், பகிர்வுகளால் தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவால் மட்டுமே சாத்தியமான ஒரு இமாலய வெற்றி.

நமது மின்னிதழில் வெளியாகும் செய்திகளில் அரிதான ஒரு சில கட்டுரைகளைத் தவிர பெரும்பாலான செய்திகள் சுருக்கமாக, எளிதில் படிக்கும் வகையில் இருப்பது தனி சிறப்பு என்றால் இதில், வெளியாகும் பல செய்திகளும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சார்பு ஊடகங்களால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட, மாற்றப்பட்ட செய்திகளை வெளிப்படுத்துவது அதன் மற்றோர் சிறப்பு.

விஜயபாரதம் மின்னிதழ் இந்த இரு வருட காலத்தில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. உதாரணமாக பத்திரிகை வடிவில் வெளிவந்த நம் மின்னிதழ் உங்கள் வசதிக்காக வாட்ஸ்ப்பில் படிக்க ஏதுவாக நீளவாக்கில் மாற்றப்பட்டது. செய்திகளின் எண்ணிக்கை, கார்ட்டூன்கள் என அவ்வப்போது சில மாற்றங்களை சந்தித்தது. விஜயபாரதம் மின்னிதழில் வெளிவரும் செய்திகள், கதைகள், வரலாற்றுத் தகவல்களை பலரும் மற்றவர்களுக்கு பகிர்வது மட்டுமின்றி, தங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸாக வைப்பது, செய்திகள் குறித்து விவாதிப்பது, குழந்தைகளுக்கு அந்த கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுவது போன்ற செயல்கள் நம் மின்னிதழை மேலும் செம்மையாக்குவதோடு எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகின்றன.

நம் விஜயபாரதம் மின்னிதழ், மேலும் பல லட்சம் பேரை சென்றடைய வேண்டும். அதனால், சமூகத்தில் நல்ல பல மாற்றங்கள் நிகழ வேண்டும். தேசம் பொலிவு பெற வேண்டும் என்பதே நம் விஜயபாரதம் நிர்வாகத்தினரின் எண்ணம்.

இதுபோன்று நமது விஜயபாரதத்தின் தேசிய வார இதழானது வாரந்தோறும் பல விழிப்புணர்வு கட்டுரைகள் தேசிய நலன் காக்கும் கருத்துகள் தமிழக ஹிந்துக்களின் பிரச்சினைகள் குறித்து பல அரிய தகவல்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனிலும் சந்தாதாரராக சேர்ந்து விஜயபாரதத்தின் தேசிய, தெய்வீக கருத்துகளை நம் நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.

உலகின் குருவாய் பாரதம் மலர்ந்திட, தமிழகம் தன் பழம் பெருமையை மீண்டும் பெற்றிட அணிலாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் பங்கை செம்மையாக செய்திடுவோம். இல்லந்தோரும் விஜயபாரதம் உள்ளந்தோரும் தேசபக்தி நிறைந்த உயர் லட்சியத்தை எய்திடுவோம்.

ஆசிரியர் குழு