வீரத்தை விதைத்துச் சென்ற வீரமங்கை

மணிகர்ணிகா நவம்பர் 19, 1828 காசியில் பிறந்தார். சிறு வயது முதலே போர் புரியும் ஆசையோடு வாள்வீச்சு, குதிரை ஏற்றம் போன்ற போர்க் கலைகளை கற்றுக்கொண்டார். பிறகு, 1842ம் ஆண்டு ஜான்சியின் மன்னர் ராஜா கங்காதர ராவ் நெவல்கருக்கு மணம் முடிக்கப்பட்டார் மணிகர்ணிகா.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, நான்கு மாதங்களில் அந்த குழந்தை இறந்தது. பின்னர் ஒரு குழந்தையினை தத்தெடுத்து தாமோதரராவ் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். மணிகர்ணிகாவிற்கு ‘லட்சுமிபாய்’ என்ற சிறப்பு பட்டம் கிடைத்தது. மேலும் அவர் ஜான்சியின் ராணியாக அரியணையில் அமர்ந்ததால் அன்றிலிருந்து அவருடைய பெயர் ‘ஜான்சிராணி லட்சுமிபாய்’ என்றானது.

மகனின் இறப்பை தாங்காத மன்னன் 1853ம் ஆண்டு உடல்நலம் பாதித்து இறந்தார். பின்னர் ஆங்கிலேயர்கள் ஜான்சி ராணியை கோட்டையை விட்டு வெளியேற சொன்னார்கள். தாமோதராவ் வளர்ப்பு மகன். சட்டப்படி அரச வாரிசுதான் மன்னராக ஏற்றுக்கொள்ளப்படுவார். வளர்ப்பு மகன் அரசனாக முடியாது, என்று கூறி 60 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக அளித்து அவரை கோட்டையை விட்டு வெளியேற்றினர்.

1857ல் சுதந்திரக் கிளர்ச்சி ஏற்பட்டது அதன் முதல் காரணம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டில் பசு, பன்றிக் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. அச்சமயம் ஜான்சிராணி தனது ஆதரவாளர்களை தேடி சென்று படைபலத்தினை அதிகரித்து, போருக்காக காத்திருந்தார்.

பிறகு 1858ம் ஆண்டு குவாலியருக்கு படையெடுத்த ஜான்சிராணி மன்னனை வீழ்த்தி குவாலியரை தன் வசப்படுத்தினார். அந்த போரில் ஜான்சிராணியின் வாள் வீசும் வேகத்தினை கண்ட படைவீரர்கள் அவரை நெருங்க பயந்தனர். ஆங்கிலேய ராணுவம் குவாலியரை கைப்பற்ற மிகப்பெரிய படையுடன் வந்தது. அப்போரில் ஆண் வேடந்தரித்து போராடினார்.

பெரிய ஆயுதப்படையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு சமாளிக்க இயலாமல் எதிரிகளின் படையினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். ஜான்சிராணி 1858ஆம் ஆண்டு ஜூன் 18ல் வீரமரணம் அடைந்தார். பிறகு ஜான்சிராணியின் உடல் குவாலியரின் அருகில் தகனம் செய்யப்பட்டது.

ப. கமலயாழினி