வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி கருத்தரங்கம்; தடுக்க கோரி மனு

சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி ஒரு அமைப்பு நடத்தும் கருத்தரங்கிற்கு அனுமதி தரக் கூடாது என துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.யிடம் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.சிவகங்கை மாவட்ட பிராமணர் சங்க தலைவர் வெ.சிவக்குமார் சாஸ்திரி, மாவட்ட செயலர் கே.ஆர். வைத்தியநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி.பாலாஜி சரவணனை சந்தித்து நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: துாத்துக்குடி ஈ.வெ.ரா., மையத்தில், இன்று திராவிடத் தமிழர் கட்சி என்ற அமைப்பினர், ஆஷ் துரை நினைவு சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்து உள்ளனர். அதில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனை, ‘பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சிநாதனால் படுகொலை செய்யப்பட்ட ஆஷ் துரை நினைவு நாள் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட ஜாதியை, சமூகம் குறித்து கருத்தரங்கம் நடத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். மூன்று மாதங்களுக்கு முன், எந்த ஒரு அமைப்பும் ஜாதி மதத்தினை இழிவு படுத்தியோ பேசியோ கூட்டம் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த தியாகிகளை அவமதிக்கும் இந்த கருத்தரங்கிற்கு அனுமதி தரக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.