குள்ளப்பசு ‘ராணி’

பசுவை கோமாதா என்று பூஜிக்கிறோம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசும்பால்தான் குழந்தைகளுக்கு உகந்த உணவாக உள்ளது. ஏறத்தாழ உலகம் முழுவதும் இது நடைமுறையில் உள்ளது. ஆநிரை முற்காலத்தில் பெரும் செல்வமாக கருதப்பட்டது. போரின் தொடக்கமாக பசுக்கூட்டத்தை அபகரிப்பது முக்கிய நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது. இதிலிருந்தே பசுக்கூட்டம் பொருளாதார ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இப்போதும் பசுக்களும் மாடுகளும் கிராமப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. பால் அபிவிருத்தி எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உன்னத உதாரணமாக ‘அமுல்’ திகழ்கிறது. உழவுக்கு உறுதுணையாக உள்ள காளைகளைப் போற்றுவது நமது பாரம்பரியம். இதற்காகத்தான் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பராக்கிரமத்தை வெளிப்படுத்துவதற்காக ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் பாரதத்தின் கவனத்தையே நம் மாநிலத்தை நோக்கி ஈர்த்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
உலகில் நூற்றுக்கணக்கான பசு ரகங்கள் உள்ளன. நெடிய ரக பசுக்களைப் போல, குள்ள ரகப் பசுக்களும் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. கேரளத்தில் உள்ள வெச்சூர் ரக பசுக்கள் பெரும்பாலும் குள்ளமாகவே உள்ளன. சுமார் 110 செ.மீ. முதல் 125 செ.மீ. வரை வளரக்கூடியவை. பறவை ஆர்வலர்கள் கிளிகளையும் புறாக்களையும் வீட்டுக்குள் உள்ள அறைகளிலேயே வளர்க்கின்றனர். இதைப்போல கேரள விவசாயக் குடும்பங்களில் வெச்சூர் ரக பசுக்களை தொழுவத்தில் வளர்க்காமல் வீட்டிலுள்ள அறையிலேயே வளர்க்கின்றனர். இதுவரை கேரளத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற 61 செ.மீ. உயரம் கொண்ட பசுதான், உலகிலேயே குள்ளமான பசு என அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கின்னஸ் புத்தகத்திலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா அருகேயுள்ள சாரிகிராம் என்ற இடத்தில் 51 செ.மீ. உயரமும் 66 செ.மீ. நீளமும் கொண்ட ராணிப என்ற பசுதான் உலகத்திலேயே குள்ளப்பசு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 26 கிலோ மட்டுமே. இந்தப் பசுவின் உரிமையாளர் காஜி முகமது அபு சுபியன். அவரது குடும்பத்தினர், இப்பசுவை தங்கள் குழந்தையைப் போல வாஞ்சையுடன் வளர்த்து வருகின்றனர்.
இந்த குள்ளப்பசுவின் படம் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அமலில் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறி குள்ளப்பசு ராணியைப் பார்ப்பதற்காக சாரிகிராமை நோக்கி மக்கள் சாரைசாரையாகப் படையெடுத்தனர். குள்ளப்பசு ராணியுடன் சுயப்படம் (செல்பி) எடுத்து மகிழ்ந்தனர். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சில பசுக்கள் இயல்பான வளர்ச்சியைவிட, குறைவாகவே வளர்வதற்கு மரபு சார்ந்த குறைபாடுகளும் காரணமாக இருக்கக்கூடும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். மனிதர்களில் வாமனர்கள் இருப்பதைப் போல, பசுக்களிலும் குள்ள வடிவம் கொண்டவை காணப்படுகின்றன என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.