உத்தராகண்ட் மதரஸாக்களில் சம்ஸ்கிருதமும் கற்பிக்கப்படும்: வக்ஃபு வாரியத் தலைவர் அறிவிப்பு

 

உத்தராகண்ட் மதரஸாக்களில் சம்ஸ்கிருதமும் கற்பிக்கப்படும் என்று வக்ஃபு வாரியத் தலைவர் ஷாதாப் ஷம்ஸ் அறிவித்துள்ளார்.

உ.பி.யில் இருந்து பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். பாஜக ஆளும் மாநிலமான இதன் வக்ஃபு வாரியத்தின் கீழ் 117 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு உருது, மற்றும் அரபு மொழி போதிக்கப்படுகிறது. இனி சம்ஸ்கிருதமும் போதிக்க இருப்பதாக உத்தராகண்ட் வக்ஃபு வாரியத் தலைவர் ஷாதாப் ஷம்ஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஷாதாப் ஷம்ஸ் கூறும்போது, “உத்தராகண்ட் என்பது ஒரு தேவபூமி. இதனால், அதற்கேற்ற வகையில் இங்குள்ள முஸ்லிம்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, இங்குள்ள மதரஸாக்களின் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் சம்ஸ்கிருதமும் போதிக்கப்படும். மாணவர்களுக்கான சீருடைகள் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசின் என்சிஇஆர்டி முறை பாடங்கள் நடத்தப்படும். ஏபிஜே அப்துல் கலாமின் கொள்கைகளின்படி இனி மதரஸா மாணவர்களும் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் படித்து பணியாற்றலாம்” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை உத்தராகண்ட் ஹரித்துவாரில் உள்ளமதரஸா அரபிக் தாரூல் உலூம்ரஷிதியா நிர்வாகம் வரவேற்றுள்ளது. இங்கு பயிலும் சுமார் 250 மாணவர்களுக்கு சம்ஸ்கிருதம் போதிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னுதாரணமாக வைத்தே தற்போது மாநிலம் முழுவதிலும் சம்ஸ்கிருத அறிவிப்பு வெளியாகி உள்ளது. வக்ஃபு வாரியத்தின் கீழ் இல்லாத மதரஸாக்களும் பல நூறு எண்ணிக்கையில் உள்ளன. இவைஅனைத்திலும் இந்தி, ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், அரபி, உருது ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இவற்றுடன் இனி சம்ஸ்கிருதமும் போதிக்கப்பட உள்ளது. இதுபோல் மதரஸாக்களில் உத்தராகண்டில்தான் முதன் முறையாக சம்ஸ்கிருதம் போதிக்கப்படுகிறது.