ஒருதலைபட்ச அறிக்கை

நீட்டுக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை, கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு பறிப்பதாக அமைந்துள்ளது என்று கூறுகிறது. நீட்டிற்கு முன்பு இவர்கள் ஆண்டுக்கு பல்லாயிரம் கிராமப்புற மாணவர்களை படிக்க வைத்து மருத்துவர்களாக ஆக்கியதை போலவும், அதனை நீட் வந்து தடுத்துவிட்டதை போலவும் அல்லவா இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது? காமலை காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். ஒரு தேர்வை எதிர்ப்பதற்கென்றே போடப்பட்ட குழுவிடம் வேறு எது மாதிரியான அறிக்கையை எதிர்பார்க்க முடியும். தி.மு.க அரசின் விருப்பதிற்கேற்ப இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

கடந்த 2017ல் 3,271 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்களில் 1,173 அரசுப்பள்ளி மாணவர்கள் சேர தகுதியுள்ளவர்களாக இருந்தும் அதில் 34 மாணவர்களே தேர்ச்சிபெற்று மருத்துவ கல்வியில் இணைந்தனர். அதுவே 2020ல் 4,129 மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு எழுதி 1,271 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் சேர தகுதி பெற்றனர். அதில் 347 பேர் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளார்கள். அப்படியெனில் உண்மையில் எது சமூகநீதி?

தனியார் மருத்துவ கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே உள்ளது அதனை எப்படி அதிகப்படுத்துவது என்று யோசிக்கவில்லை. ஏனெனில் அவை, அரசியல் கட்சிகளின் பொன் முட்டையிடும் வாத்துக்கள் (ஆதாரம்: ஆற்காடு வீராசாமியின் நேர்காணல்). அது குறித்து எதுவும் சொல்லமாட்டார்கள். முன்பு எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல்வர் குடும்பத்தின் ஆசி பெற்றவர்களின் பெயர் இடம்பெறும். தனியார் நிர்வாகக் கோட்டாவில் மருத்துவம் படிக்கவே தகுதியில்லாத பலர் பணத்தை கொட்டி வாய்ப்பைப் பெறுவார்கள். அவை அனைத்தும் இப்போது நீட் தேர்வால் முடக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று  பல அரசியல்வாதிகளின் வாரிசுகள் மலேசியாவிலும் பிலிப்பைன்சிலும் மருத்துவம் படிக்கிறார்கள். தகுதியானவர்களை தேர்வு செய்வதே நீட் தேர்வு.

நீட் தகுதி தேர்வுக்கும் பின்னர் கிராமப்புற மாணவர்கள் வாய்ப்பை பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றால் அதனை சரிசெய்ய என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். நீட் வேண்டாம் என்பதற்கு அறிக்கையளித்த அக்குழு, நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள, வெற்றி பெற வழியென்ன என்றல்லவா யோசித்து இருக்க வேண்டும்?

தனியார் பள்ளிகளில் குறைவான சம்பளத்தை பெற்று கொண்டு பயிற்சியளிக்கும் ஆசிரியரால் உருவாக்கப்படும் மாணவன், நீட் தேர்வில் வெற்றி பெறுகிறான். அரசு பள்ளி ஆசிரியர் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று கொண்டு கற்பித்தும் மாணவர்கள் நீட்தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் தவறு யார் மீது? தேர்வின் மீதா, அதனை கற்பிக்கும் ஆசிரியர் மீதா, அல்லது மாநில பாடதிட்டத்தின் மீதா? என்பதை இக்குழு  ஆராய வேண்டும் என்பதே பெற்றோர்கள் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.