தமிழகத்தில் ராமனின் சுவடுகள்…

தன் தந்தையின் சொல் ஏற்று வனவாசம் சென்ற ஸ்ரீராமனை தொடர்புப்படுத்தி பாரதமெங்கும் பல ஊர்களில் கோயில்கள், தீர்த்தங்கள் மக்களால் கொண்டாடப் படுகின்றன. ஸ்ரீராமனுடன் தொடர்புப்படுத்திக் கொள்வதில் நமக்கெல்லாம் அப்படி ஒரு பெருமை. அதனால்தான், ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் தங்கள் ஊரில்தான் நடந்ததாக சொல்லி பல ஊர்கள் ஒரே சம்பவத்துடன் தொடர்புப் படுத்தப்படுகின்றன. ஏனெனில் ஸ்ரீராமர் கடவுள் மட்டுமல்ல, அவர் நம் பாரதத்தின் அடையாளம். அந்த கானக வாசத்தில் சீதையை மீட்க ராமன் தமிழகம் வழியே இலங்கை செல்கிறான். தமிழகத்தில் ராமனோடு தொடர்புடைய தளங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் சில…

தாடகைமலை
நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது தரிசனம்தோப்பு. விஸ்வாமித்திர முனிவர் யாகம் நடத்துவதைத் தடுத்து நிறுத்தும் முகமாக அரக்கியான தாடகை பொருட்களை எடுத்து யாகக் குண்டங்களில் எறிந்தாள். அவற்றைத் தடுக்கும்பொருட்டு ராமன் தன் அம்புகளைக் கொண்டு யாகக் குண்டத்தின்மீது விதானம் அமைத்து கொடுத்த இடமே தரிசனம்கொப்பு என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
இந்த ஊரின் அருகில் ஒரு நீண்ட பாறையொன்றுள்ளது. இது, செங்குருதி தோய பேருருவம் கொண்ட ஒரு பெண் தலைவிரி கோலத்துடன் படுத்துக் கிடப்பது போன்று காணப்படும். பூதாகாரமான தலையும், மார்பும், வயிறும், கால்களும் இருப்பது போலத் தோன்றும். இந்தப் பாறை ராம அவதார காலத்தில் அரக்கியான தாடகை வாழ்ந்துவந்த மலையே தாடகைமலை என்று கூறப்படுகிறது.

விஜயாபதி
கூடங்குளத்தில் தெற்கே நதிக்கரையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இக்கிராமம் உள்ளது. ராம லட்சுமணர்கள் தாடகையைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, யாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும். விஸ்வாமித்திர முனிவரால் உருவாக்கப்பட்ட ஹோமகுண்ட கணபதி கோயிலும், மகாலிங்க சுவாமி திருக்கோயிலும் இங்கு உள்ளது.
வனவாசி மலை- கொப்பு கொண்டை ராயன் ராவணன் சீதா தேவியை வான்மார்க்கத்தில் சிறை எடுத்து செல்லும்போது தூக்கிச் செல்லும் வழித்தடம். தமது மணாளனுக்கு எளிதாகத் தெரியட்டும் என்பதற்காக, தனது வளையல், காதணி போன்ற ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கீழே போட்டுக் கொண்டே சென்றதாகவும், அங்ஙனம் கீழே போடுகையில் இவ்விடத்தில் கொப்பு என்ற காலில் அணியும் அணிகலன் விழுந்ததால் இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கொப்புகண்டு கொண்டராயன் திருமால் என பெயர் பெற்றுள்ளார்.

திருப்பள்ளியின் முக்கூடல்
திருவாருரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். இறைவனை நோக்கி தவம் புரிந்த ஜடாயு, ‘தனக்கு இறுதி எப்போது?’ என்று கேட்க, இறைவன், ‘சீதையை ராவணன் கடத்திச் செல்கையில் நீ தடுப்பாய்; அப்போது அவன் உன் சிறகுகளை வெட்டவே நீ வீழ்ந்து இறப்பாய்’ என்று கூறினார். அது கேட்ட ஜடாயு, ‘பெருமானே! அப்படியானால் நான் காசி ராமேஸ்வரம், சேது முதலான தீர்த்தங்களில் மூழ்கி’ தீர்த்தப்பயனை அடைய முடியாமல் போய்விடுமே, நான் என் செய்வேன்?’ என்று கேட்க, இறைவன் அங்கேயே முக்கூடல் தீர்த்தம் உருவாக்கி அதில் மூழ்குமாறு பணித்திட, ஜடாயு முக்கூடல் தீர்த்தமுண்டாக்கி அதில் மூழ்கிப் பயன் பெற்றனன் என்பது வரலாறு.

கழுகத்தூர்: ஜடாயு குண்டம்
மன்னார்குடி- பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில்தான், ஜடாயுவின் இறகுகளை ராவணன் வெட்டி வீழ்த்தியதாகவும், அதுஉயிர் துறக்கும் நிலை ஏற்படவே ராமன் வருவதுவரை அதன் உயிர் இருக்க வேண்டும் என்று சீதை வேண்டியதாகவும், அவ்வண்ணமே ராமன் அவ்விடம் வந்ததும் ஜடாயு நடந்தவற்றைக் கூறி உயிர் துறந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஜடாயுவின் இறுதிச்சடங்குகளை ராமன் மேற்கொண்டான். ஜடாயு முக்தி பெற்ற தலமாதலால் கழுகத்தூர் என்று பெயர் பெற்றது. ஜடாயுக்கு கல் நாட்டப்பெற்ற இடம் களப்பாள் என்றும், உத்திரகிரியை நடைபெற்ற இடம் திருக்களார் என்றும் வழங்கப்படுவதாகக் கூறப்டுகிறது. ராமபிரான் சிதையடுக்கி ஜடாயுவின் உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தை சிலை வடிவில் காணலாம்.

கழுகுமலை
கோவில்பட்டியில் இருந்து, 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ராமனால் ஜடாயுவுக்கு இறுதி காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயு மோட்சம் பெற்றதையும் அனுமனின் மூலம் அறிந்த சடாயுவின் சகோதரன் சம்பாதி, ராமனை வணங்கி, ‘உடன் பிறந்தானுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத பாவியாகிவிட்டேன்; இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று வேண்டினான். ‘யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, வழிபட்டு வர, உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ராமபிரான். அதன்படி, சம்பாதி, ஆம்பல் நதியில் நீராடி, முருகப் பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகவும், அதனால் இந்தத் தலம் கழுகுமலை என்று அழைக்கப்படுகிறது.

ராமர் பாதம்
வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் 3-வது கிலோமீட்டரில் ராமர் பாதம் உள்ளது. சீதாதேவியை ராவணன் கடத்திச் சென்றுவிட்டான் என்ற செய்தியறிந்து சீதையை மீட்டு வருவதற்காக ராமன் வேதாரண்யம் வருகிறார். பிறகு எப்படி போவதென்று இங்குள்ள பிள்ளையாரிடம் கேட்கிறார். அவர், “தென்கிழக்காகப் போனால் ஒரு மணல்மேடு வரும். அங்கிருந்து பார்த்தால் ராவணன் கோட்டை தெரியும்‘ என்று விரல் காட்டுகிறார். ராமன் நடந்து சென்ற சாலை இன்றளவும் சேது ரஸ்தா என்றழைக்கப்படுகிறது. ராமனுக்கு வழி காட்டிய பிள்ளையார், சேது ரஸ்தாவில் அமர்ந்தகோலத்தில் ஆட்காட்டிவிரலை நீட்டிய
படி இப்போதும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

கோதண்டராமர் கோயில்
விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதாதேவியைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், தேவியை ராமனிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவனிடமிருந்து பிரிந்து ராமனிடம் இணைந்திட ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்தப் பட்டாபிஷேகம் நடந்த இடத்தில் தான், ராமனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு ‘கோதண்டராமர்‘ என்று பெயர்.. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், இக்கோயில் அமைந்துள்ளது.

தேவிப்பட்டினம் நவபாஷாணம்
ராமநாதபுரத்திலிருந்து வடகிழக்காக 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் தேவிப்பட்டினம். ‘சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றதற்கு நவக்கிரக தோஷம்தான் காரணம். அதனை நீக்க, கடல் நடுவே மணலால் நவக்கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!‘ என்றது அசரீரி. ராமரும் இலங்கை செல்ல பாலம் அமைப்பதற்குமுன், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட நவக்கிரகங்களை கடலில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்குகிறார். அப்போதுதான் பெருமாளிடம் வேண்டிக் கொள்ள, கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்து போகின்றன. தேவிப்பட்டினம் நவபாஷாணம் என்பதும், கடலுக்குள் நவக்கிரக சன்னிதி என்பதும் இதுவே. சீதாதேவியைத் தேடி ராமன் இவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றமையால் தேவிப்பட்டினம் என்று பெயர் பெறலாயிற்று.

திருப்புல்லாணி
ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 8 கி.மீ. தூரத்தில் திருப்புல்லாணி அமைந்துள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்லவிருந்த ராமன், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, ராமபிரான் புல்லையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால் இது திருப்புல்லணை என அழைக்கப்பட்டது.
இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லக்குவனும் இல்லை; அனுமன் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சேதுக்கரை
திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமன் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தாகக் கூறப்படுகிறது. சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் இத்தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது.

மருந்துவாழ் மலை
இம்மலையானது பொற்றையடி கிராமத் திற்கு வடக்கே அமைந்துள்ளது. ராம-ராவண போரின்போது மயக்க நிலையிலிருந்த ராம, இலக்குவர்களை எழுப்ப அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்கையில், அதிலிருந்து விழுந்த சிறிய பகுதிதான் இந்த மருந்துவாழ் மலை என்று கூறப்படுகிறது. இம்மலை நோய்களைக் குணப்படுத்தும் அற்புத மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் சஞ்சீவி மலை எனவும் அழைக்கப்படுகிறது.

சஞ்சீவி மலை
ராஜபாளையத்திற்குக் கிழக்கே உள்ள மலையின் பெயர் சஞ்சீவி மலை. ராவணாதியருடன் நடைபெற்ற போரில் இலக்குவனுக்கு ஏற்பட்ட காயத்தைக் குணப்படுத்த, சஞ்சீவி மூலிகைகளைக் கொண்ட ஒரு மலையை அனுமன் கொண்டு வந்ததாகவும், மூலிகையைப் எடுத்த பிறகு அனுமன் அதனை வீசி எறிந்ததாகவும் அதில் ஒரு பகுதி இங்கே விழுந்து சஞ்சீவி மலையாக வளர்ச்சியடைந்ததாகவும் கூறப் படுகிறது. சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் பறந்து சென்றபோது சதுரகிரி சித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்து சதுரகிரி அருகே விழுந்தது. அதுவே சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்தசஞ்சீவி மலை என்றும் கூறப்படுகிறது.
‘இந்த மண் ராமன் நடந்த மண்’ புத்தகத்தில் இருந்து.