விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற இவரின் பாடல் இல்லாத கிராமத்து மார்கழி விடியற்காலை குறைவு…
கனீர்குரலில் சாகாவரம்பெற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் முனிவர் என்றால் இவர்முகம்தான் ஞாபகத்துக்கு வரும்…
பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவு தினம் இன்று.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும்,
‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத ஒலிச்சித்திரமாக்கியவர் சீர்காழி.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று கர்ணனுக்காக உருகிய குரலும் அவருடையதுதான்.
இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.
சீரகாழியின் ஆண்மை மிக்க குரல் இன்றும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன. இன்றளவும் !
அமுதும் தேனும் எதற்கு…
தேவன் கோயில் மணியோசை..
எங்கிருந்தோ வந்தான்…
ஓடம் நதியினிலே…
ஒற்றுமையாய் வாழ்வதாலே..
கண்ணன் வந்தான் …
கண்ணான கண்மணிக்கு அவசரமா …
ஆகிய பாடல்களைக் கேட்டவர்களால் வாழ்நாளில் அவற்றை மறக்க முடியுமா ..
திரை இசைப் பாடல்களுக்குப் பாத்திரங்களோடும் படத்தின் சம்பவங்களோடும் பொருந்திப் போக வேண்டிய தன்மை வேண்டும்.
பெரும்பாலான பாடகர்கள் அதைக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறார்கள். சீர்காழியோ திரையில் தன்னுடைய தனித்துவமான குரலை, தனித்துவமான முத்திரையியுடன் ஒலிக்கச்செய்வார்.
அது திரைப்படத்தின் பின்புலத்தைத் தாண்டிச் செல்லும் இசைப் பயணமாகவே பெரும்பாலும் இருக்கும்.
இந்தப் பாடல்களின் ஆதாரமான தன்மை சீர்காழியின் குரலால் எப்படி வலுப்பெற்றிருக்கிறது என்பதை இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்கையில் புரியும்.
தனித்து மட்டுமின்றி டிஎம்எஸ்எஸும் சீர்காழியும் எந்த விதமான ஈகோவுமின்றிப் பல பாடல்களை இணைந்து பாடியும் சிறப்பித்திருக்கிறார்கள்.
காசிக்குப் போகும் சந்யாசி..
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்..
நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற…
திருச்செந்தூரின் கடலோரத்தில்..
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்..
கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்..
ஆயிரம் கரங்கள் நீட்டி..
இப்படிப் பல பாடல்களைச் சொல்லலாம்.
இசை அறிவும் தனித்துவமான குரலும் கொண்ட இருவரும் இணைந்து பாடிய இந்தப் பாடல்கள் அனைத்துமே மறக்க முடியாத இசை அனுபவங்களாக மாறியிருப்பதில் வியப்பென்ன!
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்கள் அனைத்திந்திய வானொலி நிலையத்தாலும் பின்னாளில் தூர்தர்ஷன் மற்றும் கிராமஃபோன் நிறுவனத்தின் ரிகார்டுகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.
இதற்காக பக்தி இசையைப் பரப்பிய சிறந்த கலைஞருக்கான `கோல்டன் டிஸ்க்’ விருதைப் பெற்றவர்.
ஒலிப்பதிவுத் துறையில் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக்காலத்திலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ , காஞ்சி பெரியவர் வழங்கிய கம்பீர கான மணி, தமிழிசைக் கல்லூரி வழங்கிய இசைப் பேரறிஞர் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
ஜன்னல்கள் இல்லாத வீடுகளில்கூட சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி ஒலிக்கும். `உலகம் வாழ்க’ என்னும் அவரின் வேண்டுதலை எதிரொலிக்கும்.
சூரியன் சந்திரன் உள்ளவரை தமிழ் உள்ளவரை சீர்காழி குரல் என்றும் நிலைத்து இருக்கும்…
–திரு.புகழ் மச்சேந்திரன்