திருப்பதி – திருமலை அறிவிப்புகள்

ஓய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு, இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தது. இதனையொட்டி நிருபர்களுடன் பேசிய அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, ‘முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆலோசனையின்படி, பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். திருமலையை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பதி மலையில் இயக்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 100 மின்சார பேருந்துகளை வாங்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கோயிலுக்கு ஒரு கோமாதா என்ற எங்களுடைய புதிய திட்டத்தின் கீழ் ஏராளமான கோயில்களுக்கு தலா ஒரு பசு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலுக்கு ஏற்ப திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். திருப்பதி மலையில்தான் ஹனுமான் அவதரித்தார் என்பது எங்களுடைய நம்பிக்கை. அதற்கு தேவையான ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம். வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஸ்ரீவாணி அறக்கட்டளையின் கீழ் பக்தர்களுக்கு வழங்கி அதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் ஏழுமலையான் கோயில்களை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஹிந்து தர்ம பிரச்சாரம் என்ற அடிப்படையில் 500 ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும். காஷ்மீரில் ஏழுமலையான் கோயில் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ என்று அப்போது கூறினார்.