அமர்நாத் யாத்திரைக்கு அச்சுறுத்தல்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்ட அமர்நாத் யாத்திரை, வரும் ஜூன் 30ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கில் அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்’ (டி.ஆர்.எப்) மிரட்டல் கடிதம் வெளியிட்டுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அகமது காலித் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த பாசிச சங்கி ஆட்சி சாமானிய மக்களை, தங்களின் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. பாரதத்தில் வாழும் சாமானியர்களின் அவர்களின் வாக்குறுதிகளுக்கு ஏமாறகூடாது. காஷ்மீரி பண்டிட்களைப் போல நீங்களும் பலிகடாக்களாக மாறாதீர்கள். இந்த பாசிச சங்கி ஆட்சியின் கைக்கூலியாக மாறும் எந்த கைக்கூலியையும் நாங்கள் வெளிப்படையாகக் குறிவைப்போம். அத்தகைய கைக்கூலிகள் மற்றும் ராணுவ வீரர்களின் ரத்தம் ஜம்மு முதல் காஷ்மீர் வரை எங்கும் சிந்தும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, ‘காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளின் இத்தகைய பிரச்சாரம் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என தெரிவித்துள்ளார்.