இதுதானா அவர்களது திட்டம்

மேற்கு வங்கத்தில், சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்யும் விதமாக எட்டு கட்டங்களாக தேர்தலை நடத்தவும், அசம்பாவிதங்களைத் தடுக்க மத்திய பாதுகாப்புப் படைகளை பெருமளவில் நிறுத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தற்போது, வாக்குப்பதிவின் எட்டு கட்டங்களில் ஐந்து கட்டங்கள் முடிந்துவிட்டன. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று துவங்கவுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி மீதமுள்ள மூன்று கட்டத் தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் மமதா பானர்ஜி. ஆனால் இதில் உண்மைக் காரணமாக ‘கொரோனா’ என்பதைவிட, வேறு பெரிய உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

இரண்டு நாட்களுக்கு முன், மமதா பானர்ஜியின் அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப் வீர்ர்களையும் பா.ஜ.க தொண்டர்களையும் தாக்க வேண்டும் என தங்கள் கட்சியின் உறுப்பினர்களையும் பொதுமக்களையும் தூண்டிவிடும் வீடியோ வெளியானது. முன்னதாக, கொல்கத்தாவின் ஒரு பகுதியை ‘மினி பாகிஸ்தான்’ என்று ஹக்கீம் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மமதா பானர்ஜி, தனது பிரச்சார உரையில் பாதுகாப்புப் படையினரை சூழ்ந்துக்கொண்டு, அவர்களை பணி செய்ய விடாமல் தடுக்க ‘கேரோ’ செய்ய வேண்டும் என மக்களையும் தனது கட்சியினரையும் தூண்டிவிட்டார். அதனைத் தொடர்ந்து கூச்பிஹாரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீர்ர்களை 300க்கும் மேற்பட்ட திருணமூல் கட்சியினர் பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்களது ஆயுதங்களை பறிக்க முயன்றது, இதனால் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிசூட்டைத் தொடர்ந்து ஐந்து பேர் கொல்லப்பட்ட்து, தற்போது அவரது அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் பேசியுள்ளது என அனைத்தையும் ஆராய்ந்து ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, மமதா பானர்ஜியின் வேண்டுகோளில் மக்கள் குறித்த அக்கறை இல்லை, வேறு சில அரசியல் உள்நோக்கங்கள்தான் உள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.