மனதின் குரல் 98வது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலின் இந்த 98ஆவது பகுதியில் உங்களனைவரோடும் இணைவதில் எனக்கு ஈடில்லா மகிழ்ச்சி. சதம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம், மனதின் குரலை நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்பால் ஒரு அற்புதமான மேடையாக மாற்றியிருக்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும், எத்தனையோ லட்சக்கணக்கான செய்திகள் வாயிலாக, பல்வேறு மக்களின் உள்ளத்தின் குரல்கள் என்னை வந்தடைகின்றன.

மனதின் சக்தி: நீங்கள் உங்களுடைய மனதின் சக்தியை நன்கறிவீர்கள்; அதைப் போலவே சமூக சக்தியானது எவ்வாறு தேசத்தின் சக்தியை அதிகரிக்கிறது என்பதை மனதின் குரலின் பலப்பல பகுதிகளில் கவனித்திருக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம், இவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன், ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன். நாம் மனதின் குரலிலே, பாரதத்தின் பாரம்பரியமான விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிப்பது பற்றிப் பேசினோம். உடனடியாக பாரதநாட்டு விளையாட்டுக்களோடு இணைவது, அதில் திளைப்பது, அவற்றைக் கற்றுக் கொள்வது பற்றிய எழுச்சி நாட்டில் உருவானது. நாட்டுமக்கள் இதற்கு தங்கள் கைகளாலேயே மெருகேற்றினார்கள். இப்போது பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் மீது எந்த அளவுக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அயல்நாடுகளிலும் இவற்றுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. மனதின் குரலில் பாரத நாட்டுப் பாரம்பரியங்களில் ஒன்றான கதை சொல்லுதல் பற்றி நாம் பேசினோம். உடனடியாக இதன் புகழ் தொலை தூரங்களையும் சென்றடைந்து விட்டது. மக்கள் மிக அதிக அளவில் பாரத நாட்டுக் கதை சொல்லும் முறைகளின்பால் ஈர்க்கப்படத் தொடங்கினார்கள்.

போட்டிகளில் உற்சாக பங்கெடுப்பு: சர்தார் படேலின் பிறந்த நாளான ஒற்றுமை தினம் தொடர்பாக நாம் மனதின் குரலில் மூன்று போட்டிகள் பற்றிப் பேசினோம். இந்தப் போட்டிகள், தேசபக்திப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் மற்றும் ரங்கோலி என்ற கோலம் போடுதலோடு தொடர்புடையன. நாடெங்கிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரளாக இதில் பங்கெடுத்துக் கொண்டனர். சிறுவர்கள், பெரியோர், மூத்தோர் என இதில் அனைவரும் பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் தங்களுடைய நுழைவுகளை அனுப்பி இருக்கிறார்கள். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உங்களில் ஒவ்வொருவருமே ஒரு சாம்பியன் தான். கலையின் சாதகர் தாம். நம்முடைய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தின் மீது உங்கள் இதயங்களில் எத்தனை பிரேமை இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். போட்டியில் இடம் பெற்றிருக்கும் நுழைவுகளின் பட்டியல் மிகவும் நீளமானது. நீங்கள், கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று, இவற்றை உங்கள் குடும்பத்தாரோடு பாருங்கள், கேளுங்கள், உங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இவை இருக்கும்.

இ சஞ்சீவனி சாதனை: வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையில், பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு செயலி தான், ‘இ சஞ்சீவனி’. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை, அதாவது தொலைவான பகுதிகளில் இருந்தவாறே, காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், காணொளி ஆலோசனை வாயிலாக பத்து கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள்!! நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஒரு அலாதியான உறவு. இது ஒரு மிகப்பெரிய சாதனை.  இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் அனைவருக்கும், இந்த வசதியால் பயனடையும் நோயாளிகளுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத நாட்டு மக்கள், தொழில்நுட்பத்தை எவ்வாறு தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு. கொரோனா காலத்தில் ஈ சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டு, எத்தனையோ பேர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

யு.பி.ஐயின் சக்தி: தேசத்தின் சாமான்ய குடிமகனுக்காக, மத்தியத் தட்டு மக்களுக்காக, மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்காக, இந்த இ சஞ்சீவனியானது உயிர்க்கவசமாகத் திகழும் ஒரு செயலி. இது பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் சக்தி. மேலும் இதன் தாக்கத்தை இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பாரதத்தின் யு.பி.ஐயின் சக்தியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகின் எத்தனையோ தேசங்கள் இதன்பால் கவரப்பட்டு இருக்கின்றன. சில நாட்கள் முன்பாக பாரதத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையே, யு.பி.ஐ பே நவ் இணைப்பு தொடங்கப்பட்டது. இப்போது சிங்கப்பூர் மற்றும் பாரதத்தின் மக்கள் தங்கள் மொபைல் வாயிலாக, அவரவர் தங்கள் நாடுகளுக்குள்ளே எப்படி பணப்பரிமாற்றத்தைச் செய்து கொள்கிறார்களோ, அதைப் போலவே இப்போது பரஸ்பரம் பரிமாற்றத்தைச் செய்து கொள்ள முடியும். மக்களும் இதனால் ஆதாயம் அடையத் தொடங்கிவிட்டர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரதத்தின் இ சஞ்ஜீவனி செயலியாகட்டும், யு.பி.ஐ ஆகட்டும், வாழ்க்கையை சுலபமாக்கும் தன்மையை அதிகரிப்பதில் இவை மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.

உயிர்ப்பிக்கப்பட்ட பாரம்பரியம்: ஒரு தேசத்தில் அழிந்து வரும் பறவையினமோ, ஏதோ ஒரு உயிரினமோ, அழிவின் விளிம்பிலிருந்து அவை காப்பாற்றப்படுகின்றன. இது உலகிலே பேசுபொருளாக ஆகிறது. நமது தேசத்திலும் கூட இப்படி பல மகத்துவமான பாரம்பரியங்கள் அழிந்து விட்டன. மக்களின் மனங்களிலிருந்து அகன்று விட்டன. ஆனால் இப்போது மக்களின் பங்களிப்புச் சக்தியின் துணையோடு, இவற்றிற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தகவல் உள்ளபடியே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. நமது மரபின் மீது உங்களுக்குப் பெருமை உண்டாகும். அமெரிக்காவில் வசிக்கும் கஞ்சன் பேனர்ஜி அவர்கள், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின்பால் என் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நான் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பான்ஸ்பேரியாவிலே, இந்த மாதம், திரிபேனி கும்போ மஹோத்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இது ஏன் இத்தனை விசேஷமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏனெனில், இந்த நிகழ்வு 700 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக 700 ஆண்டுகளுக்கு முன்பாக, பங்காலின் திரிபேனியில் நடக்கும் இந்த மஹோத்சவம் தடைப்பட்டுப் போனது. இது நாடு விடுதலை அடைந்த பிறகு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. ஈராண்டுகள் முன்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ‘திரிபேனி கும்போ பொரிசாலோனா ஷொமிதி’ மூலமாக, இந்த மகோத்ச்வத்தை மீண்டும் தொடங்கினார்கள். இந்த ஏற்பாட்டோடு தொடர்புடைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு பாரம்பரியத்திற்கு மட்டும் உயிர் அளிக்கவில்லை, மாறாக, நீங்கள், பாரதத்தின் கலாச்சார மரபின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருந்திருக்கிறீர்கள்.

மீளுயிர்ப்பிக்க வேண்டியது அவசியம்: மேற்கு வங்கத்தின் திரிபேனி, பல நூற்றாண்டுகளாகவே ஒரு பவித்திரமான இடமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இதைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புனித நூல்களில், வைணவ இலக்கியங்களில், சாக்த இலக்கியங்களில், இன்னும் பிற வங்காள இலக்கியங்களில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தப் பகுதி, சம்ஸ்கிருதம், கல்வி மற்றும் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியிருந்தது. பல துறவிகளும், இதை மாக சங்கராந்தியில் கும்ப ஸ்நானம் செய்ய பவித்திரமான இடமாகக் கருதுகிறார்கள். திரிபேனியின் மரபை மீள் நிறுவவும், கும்பப் பாரம்பரியத்தின் பெருமைக்குப் புத்துயிர் அளிக்கவும் இங்கே, கடந்த ஆண்டு கும்ப மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கும்ப மஹாஸ்நானம் மற்றும் திருவிழாவானது, இந்தத் துறையில், ஒரு புதிய சக்தியைப் பெருக்கெடுத்து ஓட விட்டிருக்கிறது. இங்கு நடைபெற்ற கங்கை ஆரத்தி, ருத்ராபிஷேகம் மற்றும் யாகங்களில் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டார்கள். பல்வேறு ஆசிரமங்கள், மடங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். பாரதத்தில் இப்படிப்பட்ட மேலும் பல பழக்கங்கள் இருந்தன, இவற்றை மீளுயிர்ப்பிக்க வேண்டியது அவசியம். இவை பற்றி நடக்கும் விவாதங்கள், இவற்றின்பால் மக்களின் மனங்களில் கண்டிப்பாக உத்வேகத்தை ஊட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

குப்பையில் இருந்து கோமேதகம்: தூய்மை பாரதம் இயக்கத்தில் நமது தேசத்தில் மக்களின் பங்கெடுப்பு என்பதன் பொருளையே மாற்றி விட்டது. தேசத்தில் எங்காவது யாராவது தூய்மையோடு தொடர்புடையவராக இருக்கிறார். இப்படிப்பட்ட ஒன்றின் மீது என் கவனம் ஈர்க்கப்பட்டது. இது ஹரியானாவின் இளைஞர்களின் தூய்மை இயக்கம். ஹரியானாவில் இருக்கும் ஒரு கிராமம், துல்ஹேடி. இங்கிருக்கும் இளைஞர்கள், நாம் பிவானி நகரத்தைத் தூய்மைக்கான ஒரு எடுத்துக்காட்டாக ஆக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். இவர்கள் தூய்மை மற்றும் மக்கள் சேவைக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். அவர்கள் காலை 4 மணிக்கு பிவானிக்குச் சென்று விடுவார்கள்.  நகரின் பல்வேறு இடங்களில் இணைந்து துப்புரவுப் பணியை மேற்கொள்வார்கள். இவர்கள் இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் பல டன் கனக்கிலான குப்பையை அகற்றியிருக்கிறார்கள். தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒரு மகத்துவம் வாய்ந்த இலக்கு Waste to Wealth குப்பையிலிருந்து கோமேதகம். ஒடிஷாவின் கேந்திரபாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியான கமலா மோஹ்ரானா, ஒரு சுயவுதவிக் குழுவை இயக்கி வருகிறார். இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பால்கவர் மற்றும் பிற பேக் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களைக் கொண்டு கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். இது இவர்களுக்குத் தூய்மையோடு கூடவே வருமானத்தையும் ஈட்டும் ஒரு நல்ல வழிமுறையாக ஆகி வருகிறது. நாம் தீர்மானம் மட்டும் செய்து விட்டால் போதும், தூய்மை பாரதத்திற்கு நமது மிகப்பெரிய பங்களிப்பை நம்மால் அளிக்க முடியும்.  குறைந்தபட்சம் நெகிழிப் பைகளுக்கு பதிலாகத் துணிப் பைகளைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை நாமனைவரும் மேற்கொண்டாக வேண்டும். உங்களுடைய இந்த உறுதிப்பாடு, உங்களுக்கு எத்தனை நிறைவை அளிக்குமோ, அதே அளவுக்கு இது பிறகுக்குக் கருத்தூக்கமாகவும் அமையும்.

ஹோலி வாழ்த்துகள்: எனதருமை நாட்டுமக்களே, இன்று நானும் நீங்களும் இணைந்து, உத்வேகமளிக்கும் பல விஷயங்கள் குறித்து, மீண்டும் ஒருமுறை கலந்தோம். குடும்பத்தோடு அமர்ந்து இதைக் கேட்டோம், இப்போது இதை நாள்முழுவதும் நிணைவு கூர்வோம். நாம் தேசத்தின் கடமையுணர்வு குறித்து எந்த அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு நமக்குள் சக்தி பிறக்கிறது. இந்த சக்திப் பெருக்கோடு பயணித்து இன்று நாம் மனதின் குரலின் 98ஆவது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கிறோம். இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து ஹோலிப் பண்டிகை வரவிருக்கிறது. அனைவருக்கும் ஹோலிப் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்கள். நாம், நமது பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உறுதிப்பாட்டோடு கொண்டாட வேண்டும். உங்களுடைய அனுபவங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். இப்போது நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை, மீண்டும் புதிய விஷயங்களோடு சந்திப்போம். பலப்பல நன்றிகள். வணக்கம்.