அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்

உதகையில் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவலர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பா‌ஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். கூடலூரில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, அன்று மாலையில் உதகைக்கு வந்து, சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஏ.டி.சி. நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, உதகை காஃபிஹவுஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த ‘ஹில் காப்’ காவலர் கணேசன் கூட்டத்துக்குள் நுழைந்து, அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் சீருடையில் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. மேலும், பணியிலிருந்த காவலர் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆயுதப் படைக்கு…: இந்நிலையில், காவலர் கணேசனை ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “அரசுப் பணியாளர்கள், தாங்கள் பணியில் இருக்கும்போது, அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது விதி. இதை மீறி, சீருடையில் அண்ணாமலையுடன் காவலர் கணேசன் புகைப்படம் எடுத்திருக்கிறார். எனவே, ஒழுங்கு நடவடிக்கையாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்” என்றனர்.