தி.மு.கவின் குற்றம்

தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ‘நீட்’ தேர்வு விலக்கு தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியுள்ளது தி.மு.க அரசு. இக்கூட்டத்தில், ஆளுனரின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தேவையின்றி விமர்சித்தனர். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தினமலருக்கு அளித்த பேட்டி

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இது, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தேர்வு முறைகளை வகுக்கும் உரிமையை தந்துள்ளது. ஆனால், இதனை அரசியல் சட்டப்படி உருவாகாத தேர்வு என்று எப்படி முதல்வர் கூறுகிறார்? என தெரியவில்லை. 2017 முதல் தி.மு.க., நீட் தேர்வை அரசியலாக்குகிறது. அதற்கு மாணவர்களை பலிகடா ஆக்குகிறது. இந்த மன்னிக்க முடியாத குற்றத்தை மறைக்க நாடகமாடுகிறது. பிற மாநிலங்களில்,  நீட் தேர்வை மற்ற தேர்வுகளை போலவே பார்க்கின்றனர். ஆனால், தமிழகத்தில் பொய் வாக்குறுதி அளிக்கின்றனர்.

தேர்தலின்போது, ‘நீட் தேர்வை இல்லாமல் செய்ய  எங்களிடம் அஸ்திரம் உள்ளது; ரகசியம் உள்ளது’ என்று பொய் பிரச்சாரம் செய்தனர். அவர்களிடம் எந்த அஸ்திரமும் இல்லை.

நீட் தேர்வு ரத்து செல்லாது என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்துத்தானே மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்? அதை விடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பினால், அதை அவர் சட்டப்படித்தான் அணுகுவார். ஆளுனர் கூற்றை முழுமையாக வெளியிடாமல் சிலவற்றை மட்டும் வெளியிடுகின்றனர். தீர்மானத்தை மீண்டும் அனுப்புவது மோசடித்தனம்.

நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டதில் பெரும்பாலானவை யூகங்கள், தி.மு.கவுக்காக திரிக்கப்பட்டவை. இதுபற்றிய கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்கவில்லை. தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் சேர்க்கை, நன்கொடையின் வெள்ளை அறிக்கையையும் வெளியிடவில்லை.

இவ்வாண்டு நீட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் 57 சதவீதத்தினர் தனியார் மையங்களில் பயிலவில்லை. ஆனால், ஏ.கே.ராஜன் அறிக்கையில், 1 சதவீத மாணவர்களே பயிற்சி இன்றி, தேர்ச்சி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 1,300 சி.பி.எஸ்.இ பள்ளிகளில், பல தி.மு.க வாரிசுகளால் நடத்தப்படுபவை. ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது. நீட் தேர்வு விலக்குக்கு 12 மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு ஒருவராவது பதில் அளித்தார்களா? ஸ்டாலின், இனியாவது தமிழகத்தின் உண்மையான நலனுக்கு பாடுபட வேண்டும்.

(நன்றி: தினமலர்)