பெண்களை பற்றிய காங்கிரஸ் மனோபாவம்

கர்நாடகாவில் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில், முஸ்லிம் மாணவியர், ‘பர்தா’ அணிந்து வர தடை விதிக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிகினியோ, முக்காடோ, ஜீன்சோ, பர்தாவோ எதுவாக இருந்தாலும் அதை அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. இது, இந்திய அரசியலமைப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’  என தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்க்கும் கீழ்தரமான மனோபவம், மற்றொரு பக்கம் அவர்களுக்கு பர்தா போட்டு அடிமையாக்கும் மனோபாவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பேசிய பிரியங்காவின் பேச்சுக்கு மக்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனினும், இப்படி பேசுவது காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல என்பது கடந்தகால வரலாறு.

2017ல் குஜராத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்து ஷாகாவுக்கு செல்கிறார்களா’ என்று கேட்டார். 2019ல் 56 அங்குல மார்பு உடையவர் என்று கூறப்படும் பிரதமர், நீதிமன்றத்திற்கு வரவில்லை. தன்னைப் பாதுகாக்க ஒரு பெண்ணிடம் கேட்டுக்கொண்டார் என பெண்கள் குறித்த தனது மனோபாவத்தை வெளிப்படுத்தினார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் பேசுகையில், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பிரதமர் மோடியால் பாதிக்கப்படுகிறார்கள். மொபைல் போன் வைத்துக்கொண்டு ஜீன்ஸ் அணியும் பெண்கள் பிரதமர் மோடியை ஆதரிக்க மாட்டார்கள். அந்த இளம் பெண்களை அணுக காங்கிரஸ் பாடுபட வேண்டும் என்று பிரியங்கா தனக்கு அறிவுறுத்தியதாகக் கூறினார். காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போது ஸ்மிருதி இரானியிடம், ‘நீங்கள் அரசியலுக்கு வந்து நான்கு நாட்களே ஆகின்றன. தொலைக்காட்சியில் நடனமாடிய நீங்கள் இப்போது இப்பது அரசியல் ஆய்வாளராகிவிட்டீர்களா? என கேட்டார். இப்படி காங்கிரசின் பெண்கள் குறித்த கீழ்தரமான மனோபாவத்திற்கு பல உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.

மதிமுகன்