டெல்லியில் பயங்கரவாத சதி திட்டம் அம்பலம்

குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சில நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இருந்து இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்னர். அவர்க்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடியரசு தினத்தன்று பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த அந்த பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ள விவரமும் இந்த செயல்பாட்டில் 8 பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும் டெல்லி காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதில் தற்போது நான்கு சந்தேக நபர்கள் நாட்டில் நடமாடுவதாக காவலர்கள் சந்தேகிக்கின்றனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாத சந்தேக நபர்கள், சிக்னல் செயலி மூலம் பகிஸ்தானில் உள்ள அவர்களின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். உத்தரகாண்டில் ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து அவர்களுக்கு ‘டிராப் டெட்’ முறையில் ஆயுதங்கள் கிடைத்துள்ளன என தெரியவந்துள்ளது. இத்தகவல்கள் இப்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. மேலும், கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பயங்கரவாத சந்தேக நபர்களும் ஜனவரி 27 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் வலதுசாரி தலைவர்களை குறிவைத்து கொலை செய்ய அவர்களது தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதில் முக்கியமாக பஞ்சாப் மற்றும் டெல்லியின் மூன்று வலதுசாரித் தலைவர்கள் அவர்களின் ஹிட் லிஸ்டில் இருந்துள்ளனர். அவர்களை கொல்ல தேதியையும் நேரத்தையும் கூட இந்த பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அவர்களின் நடமாட்டம் மற்றும் தினசரி செயல்பாட்டு அட்டவணைகளை பயங்கரவாதிகள் திரட்டியுள்ளனர். முதல் இலக்கைக் கொல்வதற்காக ரூ. 50 லட்ச ரூபாயும், இரண்டாவது இலக்கை கொல்வதற்காக 1 கோடி ரூபாயும், மூன்றாவது இலக்கை கொல்ல 1.5 கோடி ரூபாயும் பேரம் பேசப்பட்டு ஹவாலா ஆபரேட்டர்கள் மூலம் டோக்கன் பணமாக ரூ. 5 லட்சம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.