ஆலயமா மசூதியா?

காசி விஸ்வநாதர் ஹிந்துஆலயமா அல்லது ஞானவாபி மசூதியா? விரைவில் உண்மை வெளிவரப் போகிறது. வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பிற்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஔரங்கசீப் உத்தரவின்படி 1664 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் வழிபட்டு வந்த சிவலிங்கம் தகர்க்கப்பட்டு கங்கையில் போடப்பட்டது. காசியில் தற்போதுள்ள ஆலயம் ராணி அகல்யாபாய் ஹோல்கரால் நிர்மாணிக்கப்பட்டது. அதையொட்டி பாதி இடிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டு உள்ள நமது தொன்மையான காசி விஸ்வநாதர் கோயில் இருப்பதைப் பார்ப்பவர்கள் கண்களில் ரத்தக் கண்ணீர் வரும்.

அது தற்போது ‘ஞானவாபி மஸ்ஜித்’ என்று அழைக்கப்பட்டு இஸ்லாமிய வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. உலகெங்கும் உள்ள சிவன் கோயில்களில் நந்தி சிவபெருமானைப் பார்த்தபடி இருக்கும். ஆனால் காசியில் இன்றுவரை நந்தி ஞானவாபி மசூதியைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காணமுடியும். இதற்கு ஒரு விடிவுக்காலம் வராதா என்று கோடிக்கணக்கான பாரதியர்கள் மனதில் புழுங்கிக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஒரு விடிவுக்காலம் வர வாய்ப்பு கிட்டியுள்ளது இந்த தீர்ப்பின் வாயிலாக. தொல்பொருள் ஆராய்ச்சியில் 5 நிபுணர்களைத் தேர்வு செய்து இந்த சர்வேயை நடத்திட வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் 5 தொல்பொருள் நிபுணர்களில் 2 பேர் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

இதற்கு ஆராய்ச்சி எதுவுமே தேவையில்லை. கண்பார்வை உள்ள எவரும் ஞானவாபி மசூதியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அயோத்தி ஆலயத்தை மீட்டிட 500 ஆண்டுகள் தேவைப்பட்டது. காசி, மதுராவை மீட்டிட இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை. அதற்காக நாம் அவற்றை மறந்துவிடக் கூடாது. 1991 ஆம் வருடம் நரசிம்மராவ் அரசு இயற்றியுள்ள சட்டத்தை முதலில் மாற்றிட வேண்டும். தொடர்ந்து காசி, மதுரா கோயில்களை மீட்டிட குரல் கொடுப்போம். வெற்றிபெறுவோம்.