வீடுகளில் விலங்குகள் வளர்த்தால் வரி

மதுரை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இனி வீடுகளில் நாய், மாடு, ஆடு, குதிரை வளர்த்தால் அதற்கு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 வரி செலுத்த வேண்டும். வளர்ப்பு பிராணிகளை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மாடு, ஆடு, குதிரைகளை சாலைகளில் விட்டால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டு, தினமும் அதன் பராமரிப்புக்கு ரூ. 100 வசூலிக்கப்படும். சாலைகளில் வீட்டு நாய்கள் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இறைச்சி, மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த மாநகராட்சி உரிமம் வழங்கப்படும், அதற்கு சதுர அடிக்கு ரூ. 10 வசூலிக்கப்படும், சாலைகளில் மீன் -இறைச்சி வியாபாரம் செய்ய தடை, கழிவு நீர் வாய்க்கால்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.