இணையவழி கல்வியில் தமிழகம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் வழக்கம்போல இயங்கவில்லை. இணைய வழியாகவே பாடம் நடத்துவது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை அறிக்கை 2019-20 ஐ மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த UDISE + அறிக்கையில், ‘தமிழகத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் இணைய வசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 17.95 சதவீத அரசு பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. மேலும், ‘கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழக அரசு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோக்கள் மூலம் கற்பிக்க முயன்றது, ஆனால் பல பள்ளிகள் கல்வி வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாததால் அந்த முயற்சி உதவவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில்கூட மோசமான இணைய வசதிகள்தான் உள்ளன. அவற்றில், 30 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளே இணைய இணைப்பைக் கொண்டுள்ளன. 46 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளே செயல்பாட்டில் உள்ள கணினிகளைக் கொண்டுள்ளன. மோசமான இணைய இணைப்பு பிரச்சனையும் பல இடங்களில் உள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கணினிகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் அவற்றில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் மட்டுமே இணைய இணைப்பைக் கொண்டுள்ளன’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.