தமிழ் இனிது

நிறங்களின் பெயர்களை எழுதும் போது முக்கியமாக இரண்டு பெயர்களை எழுதும் போது ஐயப்பாடு தோன்றும். கருப்பு, கறுப்பு எது சரி?
இருளின் நிறம் கறுப்பு.
சிலர் ‘கருப்பு’ என்று எழுதுவர். ‘கருப்பு’ என்பதன் பொருள் பஞ்சம், வறுமையான காலக்கட்டம் என்பதாகும்.
ஆனால் இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்ற சொல்லே.
நிறத்தைக் குறிக்க கருப்பு என்ற சொல்லை பயன்படுத்துதல் தவறு. கருமை என்பது கறுப்பு நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயர் ஆகும். காரிருள் கறுத்த இரவைக் குறிப்பதால் கருப்பு கருமை என்பது சரி தானே? என்பர். சிலர். கருமை+இருள்=காரிருள் ஆயிற்று. எனவே நிறத்தைக் குறிக்க கறுப்பு என்ற சொல்லைத் தான் பயன்படுத்த வேண்டும்.
அடுத்து சிகப்பு, சிவப்பு எது சரி? என்றும் சிலர் சிந்தனை செய்வர். இவ்விரண்டு சொற்களில் வினைச் சொல்லாக பயிலப்படுவது எது?
சிவந்த மண் கண் சிவந்தால் மண் சிவக்கும்போன்ற தொடர்களில் ‘சிவத்தல்’ என்பது வினையாகப் பயிலும், ‘சிகத்தல்’ என்ற வினைச்சொல் இல்லை.
எனவே சிவப்பு என்று வினைச்சொல்லாகப் பயிலும் சொல்லே சரியானது. பேச்சு வழக்கில் செக்கச்செவலேன்று என்று பயன்படுத்துவர் அச்சொல்லில் இருந்து சிகப்பு என்ற சொல் வந்திருக்கலாம். ஆனால் சிவப்பு என்பதுதான் சரியானது.
(நற்றமிழ் அறிவோம்)
-கு. சாருமதி