சூடான் நாட்டை சேர்ந்த 22 வயதான முகமது அல்மும்ஹாலித் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு 6 மாத சுற்றுலா விசாவில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரிக்கு வந்துள்ளார். அங்கு தண்டபாணி காம்பவுண்ட் பகுதியில் தங்கியுள்ளார். இவருடைய விசா 2019ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. ஆனாலும், அவர் சட்டவிரோதமாக தொடர்ந்து கோவையில் தங்கியிருந்தார். வேலை தேடி ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, கோவை திரும்பும்போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. அவரிடம் கையில் பணம் இல்லாததால், கணக்கம்பாளையம் கிராமத்தில் சிலரிடம் பெட்ரோல் வாங்க பணம் கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் பெருமாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அவரை பிடித்து விசாரித்தபோது இந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், அவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா, பின்னணி உள்ளிட்டவை குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 4 வங்க தேசத்தவர்கள் திருப்பூரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.