அயோத்தி யுத்தத்தில் சீக்கியர்கள்

பிரம்மகுந்த் சாஹிப் குருத்வாரா சரயு நதிக்கரையிலேயே உள்ளது. ராமஜென்ம பூமிக்கு கிழக்கே சில நூறு மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. குருத்வாராவை விட பிரம்மகுந்த் (பிரம்மகுளம்) தொன்மையானது. இதில் உள்ள தீர்த்தம் வியக்கவைக்கக்கூடிய தன்மைகளைக் கொண்டுள்ளது. பல்வேறு நோய்களை இந்தத் தீர்த்தம் தீர்க்கக்கூடியது. பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இப்போது இந்த பிரம்ம குந்த் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த குருத்வாராவில் பிரபந்தக் க்யானி குருஜித் சிங் கால்சா கவனித்துவருகிறார். நான் அயோத்திக்கு சென்றபோது அவருடன் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றேன். இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கலந்துரையாடலின்போது பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.

சீக்கிய நெறியை ஸ்தாபித்த குருநானக் தேவ்ஜி ராமபிரானின் மகனான லவனின் வழித்தோன்றல் என்றே தன்னைக் கருதினார். குருகிரந்த் சாகிப்ஜியின்படி, மூன்றாவது குரு அமர்தாஸ்ஜி முதல் பத்தாவது குரு கோவிந்த் சிங் வரையிலான குருக்கள் அனைவரும் ராமனின் இரண்டாவது மகனான குசனின் வழித்தோன்றல்கள்.

1469 முதல் 1538 வரையிலான காலத்தில் குருநானக் தேவ்ஜி ஹரித்வாரிலிருந்து ஜகன்நாத்புரி வரை பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் தனது முன்னோருக்கு வணக்கம் செலுத்தும் பொருட்டும் பகவான் ராமரை தரிசிக்கவும் அயோத்தியிலுள்ள ராமஜென்ம பூமிக்கும் பிரம்மகுந்த்துக்கும் சென்றுள்ளார். அப்போது அவர், ராமர் கோயிலை இடித்த பாபரை வன்மையாகக் கண்டித்துள்ளார். அவருக்குப் பிறகு, 9வது குரு தேஜ்பகதூரும் பிரம்ம குந்துக்குச் சென்றுள்ளார். ஆனால் பத்தாவது குருகோவிந்த் சிங் இங்கு சென்றதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஔரங்கசீப்பின் ராட்சஸ ஆட்சியின்போது அயோத்திக்கு வைஷ்ணவதாஸ் என்ற மகான் வந்தார். அவர் சத்ரபதி சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாசரின் சீடர். வைஸ்ணவதாஸ் தனிமனிதர் கிடையாது. அவருடன் 10,000 சிம்மத்தாரி சன்னியாசிகளும் அயோத்திக்கு வந்தனர். புறத்தோற்றத்தில்தான் அவர்கள் சன்னியாசிகள். ஆனால் உண்மையில் அவர்கள் போர்க்கலை, வேவுபார்த்தல், மக்களைத் திரட்டுதல், உந்துசக்தி ஊட்டுதல் போன்றவற்றில் வல்லவர்கள். வைஷ்ணவதாஸ் ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணாக்கவில்லை. அவர் 5,000 சூர்யவம்ச சத்திரியர்களை கொண்ட சேனையை உருவாக்கினார். இதன்பிறகு எந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த பீடம் இடிக்கப்பட்டதோ அதே இடத்தில் மீண்டும் அதை நிறுவினார். ராமனின் விக்கிரகத்தை அங்கு பிரதிஷ்டை செய்தார்.

இந்த செய்தி டெல்லியிலிருந்த ஔரங்கசீப்பை எட்டியது. அவர் சினந்து சீறினார். உடனடியாக ஜம்பஸ்கான் தலைமையில் 20,000 வீரர்களை அயோத்திக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அவர்களை வைஷ்ணவதாஸின் படையினர் தோற்கடித்தனர். இதை கேள்விப்பட்ட ஔரங்கசீப் கோபத்தின் உச்சிக்கு சென்றார். தளபதி சையத் ஹாசன் அலி தலைமையில் 50,000 வீரர்களை, பீரங்கிப் படையுடன் அயோத்திக்கு அனுப்பிவைத்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஔரங்கசீப்பின் படையை முறியடிக்க வைஷ்ணவதாஸ் திட்டம் தீட்டினார். அப்போது ஆக்ரா அருகே உள்ள ஓர் இடத்தில் குருகோவிந்த் தங்கியிருந்தார். அவரை தொடர்புகொண்டு தனக்கு உதவ வேண்டுகோள் விடுத்தார் வைஷ்ணவதாஸ். இதை ஏற்ற குருகோவிந்த் சிங் உடனடியாக 5,000 நிகாங்குகளுடன் அயோத்திக்கு விரைந்தார். குருகோவிந்தும் வைஷ்ணவதாசும் சந்தித்துப் பேசிய இடம்தான் பிரம்ம குந்த். முகலாய சேனையை தோற்கடிப்பது குறித்து இருவரும் கலந்தாலோசித்து வியூகம் வகுத்தனர்.

இந்த வியூகத்தின்படி ஷாகதத்கஞ்ச் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சீக்கிய நிகாங்குகளும் ருடௌவ்லி அருகே சத்திரிய படையினரும் ஜல்பா அருகேயுள்ள சராபத் வனப்பகுதியில் சிம்மததாரிகளும் தயார் நிலையில் பதுங்கியிருப்பதென தீர்மானிக்கப்பட்டது. அக்காலத்தில் இப்பகுதியில் விரல் விட்டு எண்ணத்தக்க குடிசைகளே இருந்தன. பெரும்பாலானவை வனப்பகுதிகளே.முகலாய சேனையை எதிர்த்து ருடாலியில் சூரியவம்ச சத்திரியர்கள் போரிட்டார்கள். சிறிதுநேர யுத்தத்துக்குப் பிறகு, வனப்பகுதிக்குள் புகுந்து மாயமாகிவிட்டார்கள். பிறகு அவர்கள் சீக்கிய படையுடன் சேர்ந்து போரிட்டார்கள். ஹிந்து சேனையை தோற்கடித்துவிட்டோம், இனி அயோத்தியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணினார் சையத் ஹாஸன் அலி. அயோத்திக்கு விரைந்து செல்ல படையினருக்கு ஆணையிட்டார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ருடோலியை சில மைல்கள் கடந்த பிறகு சரபத் வனப்பகுதியில் முகலாயப்படையை சிம்மததாரிகள் ஆவேசமாகத் தாக்கினர். எதிர்பாராத திடீர் தாக்குதலால் முகலாயப் படையினர் நிலைகுலைந்தனர். பின் பக்கத்திலிருந்து சீக்கியர்களும் சத்திரியர்களும் கூட்டாக தாக்கத் தொடங்கியதும் முகலாயப் படையினர் இனிமேல் வெற்றிபெற முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அவர்களது பீரங்கிப் படையாலும் எதையும் செய்யமுடியவில்லை. முகலாயப் படை நிர்மூலம் ஆக்கப்பட்டது. சையத் ஹாசன் அலியை சிம்மத்தாரிகள் கொன்றார்கள். யுத்தத்தின் தொடக்க நிலையிலேயே இது நிகழ்ந்துவிட்டது. வரலாற்றுப்பதிவின்படி முகலாயப்படையினர் 47 பேர் மட்டுமே டெல்லிக்குத் திரும்பினர்.

இந்த செய்தி ஔரங்கசீப்புக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. அவர் சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். அயோத்தியில் மேலும் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து வைஷ்ணவதாஸ் வழிபாடு நடத்தினார். பீடமும் அதன்மீது ஸ்தாபிக்கப்பட்டிருந்த விக்ரகமும் மாற்றப்பட்டது. அவை பொலிவு குன்றாமல் மிளிர்ந்தன. ராம ஜென்ம பூமி தொடர்பாக 76 யுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு முக்கிய யுத்தங்களில் ஹிந்துக்கள் வாகைசூடினார்கள். இவற்றுக்கான வியூகம் வகுக்கப்பட்ட இடம்தான் பிரம்மகுந்த். குருகோவிந்த் சிங்கும் வைஷ்ணவ தாஸும் சந்தித்து கலந்துரையாடிய பிரம்மகுந்துக்கு சென்றதை நான் பெரும்பாக்கியமாகக் கருதுகிறேன். பிரம்மகுந்தத் தீர்த்தத்தை எடுத்து அருந்தினேன். அங்குள்ள புழுதியையெடுத்து நெற்றியில் திலகமிட்டுக்கொண்டேன்.
கட்டுரையாளர்:பிரபாகர்பட்வர்தன்
நன்றி:ஆர்கனைசர்