நீதிமன்ற அவமதிப்பு செய்யும் சேகர்பாபு

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆலய சொத்துக்கள் ஆலய உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வலியுறுத்தி கூறியும், ஹிந்து சமய அறநிலையத்துறை, கோயில் இடங்களை அரசு துறைக்கு தாரை வார்த்து தங்கள் விசுவாசத்தை காட்டிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள், கோயில் இடத்தில் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கிறது மாங்காடு நகராட்சி. இது கோயிலுக்கு வரும் ஹிந்துக்களுக்கு, அரசு விதிக்கும் தண்டனை. ஔரங்கசீப் காலத்தில் ஹிந்துவாக வாழ்வதற்கு விதிக்கப்பட்ட ஜசியா வரியை போன்றது. தற்போது அதே மாங்காடு காமாட்சி அம்மன் ஆலய இடத்தை பேருந்து நிலையம் கட்ட எதன் அடிப்படையில் தாரை வார்க்கிறது ஹிந்து சமய அறநிலையத்துறை? வடபழனி முருகன் கோயில் இடத்தை, கருணாநிதி ஆட்சி காலத்தில் பெண்கள் விடுதி கட்ட சமூக நலத்துறைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட சமூக நலத்துறை வாடைகை தரவில்லை. இந்நிலையில் போக்குவரத்து துறை முன்பே நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது. இதில் அதனிடம் வாடகை எப்படி கோயில் வசூல் செய்யும்? தி.மு.க அரசியல் செய்ய அமைச்சர் சேகர் பாபு தனது இடத்தையோ அல்லது தி.மு.கவின் அறக்கட்டளை சொத்தையோ தரட்டும். இல்லையென்றால் வக்ஃப் வாரி சொத்தையோ சர்ச் சொத்துக்களை தரட்டும். கோயில் இடத்தை அரசு துறை விழுங்குவதை ஹிந்துக்கள் எதிர்ப்போம். இதற்கான ஆட்சேபணையை ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிப்போம். இந்த நடவடிக்கையை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதேபோல, காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிக முக்கியமான பூஜையான சண்முகா அர்ச்சனை கட்டணமாக ரூ. 1,500 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கு ரூ. 5000 ஆக கட்டணம்உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வருடத்திற்கு சுமார் 30 கோடிக்கும் மேல் வருமானம் வருகிறது. ஆனால், இந்த வருமானத்தின் மூலமாக ஆலயத்திற்கு என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. இந்நிலையில் சண்முகா அர்ச்சனைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.