செந்தில் பாலாஜியால் சிக்கல் நீர்வளத்துறை அதிகாரியிடம் ‘ரெய்டு’

அம்பத்துார்,:அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை எதிரொலியாக, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி வீட்டிலும், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், ஜூன் 14ல், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.

அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரிடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணை அடிப்படையில், நீர்வள ஆதாரத்துறை திருவள்ளூர் மாவட்ட அதிகாரி திலகம், 55, என்பவரின் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது.

இவர் வசிக்கும், சென்னை முகப்பேர் கிழக்கு, அரசர் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், காலை 8:30 மணி முதல் ஏழு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை செய்தனர்.

மேலும், திலகம் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

திலகம் தற்போது, கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்ட திருவள்ளூர் மாவட்ட செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் மேம்பாடு மற்றும் மணல் குவாரிகள் தொடர்பான பணிகளில், அமைச்சரின் ‘ஆசி’யுடன், பொதுப்பணித்துறை திலகத்தின் அதிகாரத்தால், முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நேற்று மாலை வரை, அவரது வீடு மற்றும் அங்குள்ள அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் தொடர்பான, சோதனை மற்றும் விசாரணை நீடித்தது.