நோய் நாடி, நோய் முதல் நாடி . . .

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், ஆங்கில மருத்துவம் முழுமையடையாத காலகட்டத்தில் பெயர் தெரியாத பல நோய்களால் மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வந்தனர். அப்போது ஜெர்மனியைச் சேர்ந்த சாமுவேல் ஹானிமன், இதனை கண்டு மனம் வருந்தினார். தான் படித்த ஆங்கில மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதைவிட நோயாளிகளுக்கு அதிக வேதனையைத்தான் தருகிறது என்பதை உணர்ந்து சிறிது காலம் மருத்துவத்தைவிட்டு ஒதுங்கி மருத்துவ அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, மலேரியாவைக் குணப்படுத்தும் தன்மை சின்கோனா மரப்பட்டைக்கு உண்டு என்பதை படித்தார். இதனை அனுபவரீதியாக ஆய்வுசெய்ய சின்கோனா மரப்பட்டைகளை ஹானிமன் உட்கொண்டார். அப்போது, மலேரியா காய்ச்சல் பாதித்தால் என்னென்ன நோய் அறிகுறிகள் வருமோ, அந்த அறிகுறிகள் எல்லாம் அவருக்கு வெளிப்பட்டன. எது மருந்தாகப் பயன்படுகிறதோ அதுவே நோயை உண்டாக்கும் கூறுகளையும் பெற்றிருக்கும் என்று அறிந்தார். இதனடிப்படையில், ‘ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும்’ என்ற கோட்பாட்டைக்கொண்டு டாக்டர் ஹானிமன், கண்டறிந்ததுதான் ஹோமியோபதி மருத்துவம்.

ஹோமியோபதி மருத்துவம், நோயாளிகளை அணுகும்முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து வேறுபட்டது. நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து என்ற முறையில் நோயாளிகளை அணுகக்கூடியது. உதாரணமாக, காய்ச்சல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள். அப்படி இருக்கும்போது, மருந்து மட்டும் எப்படி பொதுவாக இருக்கும் என்ற நியதியின்படி  ஹானிமன் உயிராற்றல் பற்றிய கோட்பாடுகளை வளர்த்தெடுத்தார். இதனை, `உடல் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றையொன்று தீர்மானித்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு சக்தியாக, உடலெங்கும் பரவி ஆளுமை செலுத்தும் ஆற்றலே, உயிராற்றல்’ என்று தன்னுடைய `ஆர்கனன் ஆப் மெடிசன்’ நூலில் ஹானிமன் கூறியுள்ளார்.

ஹோமியோபதி மருத்துவமுறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவம். உலக அளவில் 200 மில்லியன் மக்கள் ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டாக்டர் ஹானிமன் நினைவாகவே ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ம் தேதி ‘உலக ஹோமியோபதி நாள்’ கொண்டாடப்படுகிறது.

  • சங்கீதா சரவணகுமார்