விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவத்தை முன்னிட்டு, ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாரதத்தின் 75 ஆண்டு கால அறிவியல் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 75 இடங்களில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஒரு வார கால விழாவை மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் டாக்டர். ஜித்தேந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று துவக்கிவைத்தனர். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், முற்போக்கான நாட்டை உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டும் விதத்திலும் அரசுத்துறையின் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து கலாச்சாரத்துறை அமைச்சகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. இதில், பாரத அறிவுமுறை, பழங்கால இந்தியாவில் பொருளாதார சிந்தனை, உலோகவியல், வேளாண்மை போன்றவை குறித்த பல விரிவுரை நிகழ்ச்சிகளும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, காஷ்மீரி என பல்வேறு உள்ளூர் மொழிகளில் நடத்தப்படுகின்றன. பாரதத்தின் அறிவியல் முன்னேற்றங்கள், சாதனைகள் குறித்த 75 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு https://vigyanpujyate.in/locations என்ற இணையதளத்தை அணுகலாம்.