தி.மு.க அபார (ய) வெற்றி

நடந்து முடிந்த நகராட்சித் தேர்தல்களில் எதிர்பார்த்தபடியே ஆளும் கட்சியான தி.மு.க அபார வெற்றி பெற்றுள்ளது. வாழ்த்துகள். பொதுவாகவே இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி வெர்று பெறுவது இயற்கையே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தி.மு.க பெற்றுள்ள இந்த வெற்றி அப்படிப்பட்ட சாதாரண வெற்றியல்ல. தேர்தல் அறிவிக்கும் முன்பே தி.மு.கவினர் வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் போன்றவற்றை அளிக்கத் துவங்கிவிட்டனர்.

அ.தி.மு.க தலைமையோ பழைய பலமின்றி, ஆளுமைமிக்க ஒரே தலைமையின்றி திணறி வருகிறது தி.மு.க போடும் தொடர் வழக்குகளால் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பயந்து ஒதுங்கி வருகின்றனர். மேலும், பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஓரணியில் நின்றன. வழக்கம்போல அவர்களின் துணைக்கு பிரிவினைவாதிகள், சிறுபான்மையினர், வளைக்கப்பட்ட அரசு இயந்திரம், காவல்துறை, ரௌடிகள் எல்லாம் ஒன்றிணைந்தனர். பெரும்பான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காக பல தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சிறுபான்மையினரோ சர்ச், மசூதிகளில் தி.மு.க வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தனர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட ஊழல்களில் சம்பாதித்த பணம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் விளையாடியதை கண்கூடாகவே பார்க்க முடிந்தது.

இது ஒருபுறம் இருக்க, பொதுமக்கள் பலர் வாக்களிக்கவே வரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, வாக்களிக்க அவர்களுக்குள்ள சோம்பேறித்தனம், அக்கறையின்மை போன்ற விழிப்புணர்வற்ற மாறாத பழக்க வழக்கங்கள். மற்றொன்று, தி.மு.க இதற்கு முன்பு தேர்தல்களில் குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல்களில் நிகழ்த்திய வன்முறைகளை அவர்கள் இன்னும் மறக்காமல் இருந்திருக்கலாம். அதற்கேற்ப இந்தத் தேர்தலிலும், வேட்பாளர்கள் மிரட்டல், வாக்காளர்கள் மிரட்டல், கள்ள ஓட்டு, வன்முறைகள் போன்றவற்றை தி.மு.கவினர் அறங்கேற்றியுள்ளனர். இவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தவறு செய்தவர்களை தட்டிக்கேட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு விழாமல் தடுக்க முயன்ற பா.ஜ.க பூத் ஏஜெண்ட் போன்றோர்கள்தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி, அராஜகம் செய்யும் ரௌடிகள், அதை தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறை, முறைகேடு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய மாநில தேர்தல் ஆணையம் என அனைத்தும் தி.மு.க தலைமையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் எதிர்கட்சிகள் எப்படி வெற்றிபெற முடியும்? இந்த பின்னணியில் தி.மு.க பெற்றுள்ள இந்த வெற்றி மிக எளிதானதுதான். பண விநியோகம் உள்ளிட்ட விதிமீறல்கள் இன்றி நேர்மையாக, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதுவும் தி.மு.க தைரியமாக தனித்து நின்றிருந்தால் அதன் உண்மையான வலிமை உலகிற்கு தெரிந்திருக்கும். அனைத்திற்கும் மேலாக, ஹிந்துக்களின் விழிப்புணர்வின்மை, ஒர்றுமையின்மையே இத்தேர்தலில் தி.மு.க வெற்றிக்கு வழி வகுத்தது என்றால் அது மிகை அல்ல.

மதிமுகன்