சமயபுரம் பூச்சொரிதல் விழா

திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் மாசி மாதம் தொடங்கும் பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டமும் பிரசித்தி பெற்றவை. பூச்சொரிதல் விழா பெண்களுக்கு சிறப்பு வாய்ந்தது. இக்காலக்கட்டத்தில் பக்தர்களின் நலனுக்காக 28 நாட்களுக்கு அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருக்கிறாள். தங்களுக்காக அன்னயே விரதம் இருக்கும் இக்காலத்தில், பெண் பக்தர்களும் தங்கள் வீடுகளில் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபடுவார்கள். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வணங்குவார்கள். இந்த பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) அமைப்பு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், 13வது ஆண்டாக வி.ஹெச்.பி. சார்பில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி டவுன், ஸ்ரீரங்கம், சமயபுரம், அந்தநல்லூர், உறையூர், மணப்பாறை, மாங்கனாப்பட்டி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். ஸ்ரீரங்கம் முதல் சமயபுரம்வரை பாதயாத்திரையாக சென்று அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். இவ்விழாவில் வி.ஹெச்.பி. அமைப்பின் மாநில துணைத் தலைவர் டாக்டர் பத்மாவதி, மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன், மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் பீமாராவ், மாநில செய்தித் தொடர்பாளர் ஆறுமுகக்கனி, மாநில துர்காவாகினி அமைப்பாளர் லாவண்யா, மாநில மாத்ரு சக்தி அமைப்பாளர் சாவித்திரி உள்ளிட்ட பல நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.