உப்பு சத்யாகிரக நினைவு யாத்திரை

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உப்பு சத்யாகிரக நினைவு யாத்திரையை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாரதமெங்கும் நடைபெற்ற உப்பு சத்யாகிரகத்தை முன்னிட்டு இந்த யாத்திரை 1930ல் கேரள காந்தி என புகழப்படும் கே. கேளப்பன் தலைமையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தளி சிவன் கோயிலில் இருந்து கண்ணூர் மாவட்டம் பையனூர் வரை நடத்தப்பட்டது. நாட்டின் 75வது சுதந்திர வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நினைவு யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ‘ஜனனீ ஜென்மபூமி ச ஸ்வர்கதாபி கரீயஸி என்ற கருத்து நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. தேச விடுதலைகாக ஒன்றிணைந்து போராடிய லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இது உத்வேகம் அளித்தது. நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கை, வேலை, கல்வி, தொழில் என அனைத்தையும் துறப்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களில் நம்மால் அறியப்படாதவர்கள் அதிகம். பாரதம் என்பது வெறும் நிலம் அல்ல. இது ஆற்றலின் மூலம். சுதந்திரம் என்பது வெறும் அரசியல் கருத்து அல்ல. இது கலாச்சார விழுமியங்களின் புத்துணர்ச்சி. அதனால்தான் நமது சுதந்திரப் போராட்டமும் ஆன்மீக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது’ என கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரதத் துணை செயலாளரும் ஜென்மபூமி மலையாள நாளிதழின் இயக்குனருமான எம். ராதாகிருஷ்ணன், ‘கேரள மாநிலம் சமீபகாலமாக நடத்தப்பட்ட பேய்மயமாக்கல் காரணமாக கேளப்பன் போன்ற தியாகிகள் புறக்கணிக்கப்பட்டனர். கேளப்பன், உண்மை, தைரியம், நேர்மைக்காக பாடுபட்டார். இம்மாநிலம் உருவான காலத்திலிருந்தே ஆட்சி செய்து வருபவர்கள் அவரின் இந்தக் குணங்களை விரும்பவில்லை. இப்போது நாம் பார்க்கும் கேரள மாநிலம் ஆட்சிக்கு வந்த பொருள்முதல்வாத சக்திகளால் உருவானது. ஆனால், இப்போது  நமது சமூகம் எப்படி வலுவான நிலைப்பாட்டை எடுப்பது என்பதை  மீண்டும் மெதுவாகக் கற்றுக்கொண்டு வருகிறது’ என கூறினார்.