ஆண்டு முழுவதும் மகசூல் அளிக்கும் சதாபகார் மாங்கனி

மாமரம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே மகசூல் தரும். தமிழ்நாட்டில் இந்த கோடைகாலம்தான் மாம்பழ சீசன். மாங்கனி அதிகமாக விளைந்தால் அது மங்கும் காலம். புளி அதிகமாக விளைந்தால் பொங்கும் காலம் என்ற வேளாண்மை சார்ந்த வழக்காறு பரவலாகக் காணப்படுகிறது. பாரதத்தில் மாம்பழ உற்பத்தி அமோகமாக உள்ளது. எனினும் சர்வதேச அளவில் இதை செம்மையான முறையில் சந்தைப்படுத்த முனைப்பார்ந்த முயற்சி தேவை.

தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் விளைகின்ற மாங்கனி தனித்தன்மை மிக்கது. இதற்கு புவிசார் குறியீடு விரைவில் அளிக்கப்பட்டால் அதற்கான தேவை மேலும் உயரும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதற்கிடையே சேலம் மாம்பழத்துக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் வாய்ப்புள்ளது என்ற செய்தியும்கசிந்துள்ளது. பாலைவன மாநிலம் என்று ராஜஸ்தான் கருதப்படுகிறது. ராஜஸ்தான் என்றவுடனே ஒட்டகம்தான் நினைவுக்கு வருகிறது. ராஜஸ்தானில் ருசிமிக்க மாம்பழங்களும் விளைகின்றன. ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகிருஷ்ணன் சுமன் 52 வயதான இவ்விவசாயி, மாம்பழச் சாகுபடியில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அவர் பள்ளிக்கூடத்தில் 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதற்கு மேல் படிக்க குடும்ப சூழ்நிலை இடங்கொடுக்கவில்லை. அவரது குடும்பத்தினர் நெல், கோதுமை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சுமனின் கவனம் மலர்ச் சாகுபடி பக்கம் திரும்பியது. விதவிதமான ரோஜாக்களை விளைவித்து விற்று லாபம் பார்த்தார். இதன்பிறகு பழ உற்பத்தியிலும் அவரது கவனம் திரும்பியது. மாமரங்களை வளர்த்தார். அவரது மாந்தோப்பில் ஒரு குறிப்பிட்ட மரம் எல்லா காலங்களிலும் காய்த்தது. இதை அடிப்படையாக வைத்து ஒட்டுச்சேர்த்து புதிய ரக மாங்கன்றை அவர் உருவாக்கினார். இதற்கு ‘சதாபகார்’ என்று பெயர் சூட்டினார். இதற்கு ‘என்றும் பசுமை’ என்று பொருள். இந்த மாமரத்தில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

இது எளிதில் நோய்த் தாக்குதலுக்கு இலக்காகாது. இது அதிக உயரம் வளராது. எனவே நெருக்கமாக நடவு செய்யலாம். ஒரு ஹெக்டேரில் ஆறு டன் வரை விளைச்சல் எடுக்கமுடியும். இதன் ருசியும் சதைப்பற்றும் அபாரம். மாங்கூழ் தயாரிக்க இது மிகவும் உகந்தது. ஏனெனில் இதில் நார்த்தன்மை மிகவும் குறைவு.
இது இரண்டு ஆண்டுகளிலேயே காய்க்க ஆரம்பித்துவிடும். தேசிய புத்தாக்க முகமை, விவசாயி சுமனைப் பாராட்டியுள்ளது. ஒன்பதாவது அடிப்படை நிலை கண்டுபிடிப்பாளர் மற்றும் பாரம்பரிய அறிவுச்செயல்பாட்டாளர். நிகழ்ச்சியில் சுமனுக்கு விருது வழங்கப்பட்டது. அவர் உருவாக்கியுள்ள ‘சதாபகார்’ மாங்கன்று டெல்லி ராஷ்ட்ரபதி மாளிகை வளாகத்திலுள்ள முகல் தோட்டத்திலும் நடப்பட்டுள்ளது.

சதாபகார் மாங்கன்றுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களிலும் சதாபகார் கன்றுகள் நடப்பட்டுள்ளன. கரும் பச்சை இலைகளும் ஆழ்ந்த ஆரஞ்சு வண்ண மாங்கனிகளும் விழிகளுக்கு விருந்து படைக்கும் வகையில் காட்சியளிக்கின்றன.