தியாகமே உன் பெயர் தான் ஸ்வயம்சேவகனோ?

நாக்பூர் மக்களால் தபட்கர் காக்கா என அன்புடன் அழைக்கப்படுபவர் 85 வயதான நாராயண் தபட்கர். ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்க்க அவரது மகள் மிகவும் பிரயத்தனப்பட்டார். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, அவருக்கு இந்திரா காந்தி மருத்துவமனையில் சேர்க்கை கிடைத்தது. அவர் தனது பேரன், மகள் மருமகனுடன் ஆம்புலன்சில் மருத்துவமனையை அடைந்தபோது, தபட்கர் காக்காவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துவிட்டது. மருத்துவமனையில் அவரது சேர்க்கைக்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அவரது குழந்தைகளும் தனது கணவரை மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் அழுவதைக் கண்டார் தபட்கர் காக்கா. உடனே ஒரு முடிவெடுத்த அவர், தனக்கு உதவி செய்துகொண்டிருந்த மருத்துவக் குழுவிடம், அமைதியாக, ‘எனக்கு இப்போது 85 வயதாகிறது, என் வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேன், எனக்கு பதிலாக நீங்கள் இந்த மனிதனுக்கு படுக்கையை வழங்க வேண்டும், அவருடைய குழந்தைகளுக்கு அவர் தேவை’ என்று கூறினார். அவர் கூறியது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் அவர் தனது பேரன், மருமகள், மகளை அழைத்து தனது முடிவை அவர்களுக்குத் தெரிவித்தார். சிறிது தயக்கத்திற்குப் பிறகு, கனத்த மனத்துடன் அவர்களும் அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அந்த இளைஞனுக்காக தனது படுக்கையை விட்டுத்தருவதாக ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு வீடு திரும்பினார் தபட்கர் காக்கா. வீடு திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு நோயின் கொடுமை தாளாமல் இறைவனடி சேர்ந்தார் அந்த ஸ்வயம்சேவகர்.