இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் பத்திர முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருவாயில், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், நாணயங்கள் தயாரித்தலுக்குப் பிறகு அதனிடம் உபரியாக இருக்கும் தொகையில் ஒரு பகுதியை உபரி மற்றும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு அளிக்கும். ஆர்பிஐ அளிக்கும் இந்த உபரித் தொகை, தேசத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். அவ்வகையில், 2021 – 2022 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ. 30,307 கோடி உபரி மற்றும் ஈவுத்தொகை வழங்க, ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 596வது மத்திய இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தற்போதைய பொருளாதார நிலைமை, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்கள், அவற்றின் தாக்கம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.